|
150
155
|
பாடல்சால் சிறப்பிற் பாண்டிநன்
னாட்டுக்
கலிகெழு கூடல் கதழெரி மண்ட
முலைமுகந் திருகிய மூவா மேனிப்
பத்தினிக் கோட்டப் படிப்புறம் வகுத்து
நித்தல் விழாவணி நிகழ்கென் றேவிப்
பூவும் புகையும் மேவிய விரையும்
தேவந் திகையைச் செய்கென் றருளி
வலமுறை மும்முறை வந்தனன் வணங்கி
உலக மன்னவ னின்றோன் முன்னர்
|
|
பாடல்
சால் சிறப்பின் பாண்டி நல் நாட்டுக் கலி கெழு கூடல் கதழ்எரி மண்ட - புலவர் புகழ்ந்து
பாடும் பாடல் மிக்க சிறப்பினையுடைய பாண்டி நாட்டின் தலைநகராய பல் வகை ஒலி பொருந்திய
கூடலிடத்து விரைந்து பற்றுந் தீ மிகும் வண்ணம், முலைமுகம் திருகிய மூவாமேனிப் பத்தினிக்
கோட்டப் படிப்புறம் வகுத்து - தனது இடக் கொங்கையைத் திருகி எறிந்த முதிராத மேனியையுடைய
கற்புத் தெய்வத்தின் கோயிலுக்கு அர்ச்சனாபோகத்தை நியமித்து, நித்தல் விழா அணி
நிகழ்கென்று ஏவி - நித்தல் விழாவாகிய சிறப்பும் நடைபெறுக என்று ஏவுதல் செய்து, பூவும்
புகையும் மேவிய விரையும் தேவந்திகையைச் செய்கென்று அருளி - தேவந்திகையை நோக்கிப்
பூ முதலியவற்றை நீ செய்கவென்று அருள்செய்து, வல முறை மும்முறை வந்தனன் வணங்கி உலக மன்னவன்
நின்றோன் முன்னர் - கோட்டத்தை மூன்றுமுறை வலமாக வந்து வணங்கி நின்றோனாகிய உலக
மன்னவன் எதிரே ;
கலி - விழவொலி முதலியன ; அன்றி
மகிழ்ச்சி எனலுமாம். படிப்புறம் - அருச்சனாபோகம் ; அருச்சனை முதலியவற்றுக்கு இறையிலியாக
நிலம் விடுதல் ; நிபந்தமுமாம். நித்தல்விழா - நாடொறும் நிகழும் சிறப்பு ; நிகழ்கென்று
- நிகழச் செய்கவென்று, 1"பத்தினிக்
கோட்டமும் சமைத்து, நித்தல் விழாவணி நிகழ்வித்வித்தோனே" என முன்னர்ப் போந்தமையுங்
காண்க. பூவும் புகையும் விரையுஞ் செய்கென்றது, சந்தன முதலியன சாத்துதலும் மலரால் அருச்சித்தலும்
நறும்புகை எடுத்தலும் செய்வாயாக என்றவாறு. உலக மன்னவன், நீடு வாழியரோ நெடுந்தகையென்ற
மறையோன் தன்னொடு மகிழ்ந்து வகுத்து ஏவி அருளி வந்தனன் வணங்கி நின்றோன் முன்னர்
என்க. வந்தனன், முற்றெச்சம், நின்றோன், வினைப்பெயர்.
|
1.
சிலப். உரைபெறுகட்டுரை, 4.
|
|