|
10
15
20
|
மையீ ரோதி வகைபெறு வனப்பின்
ஐவகை வகுக்கும் பருவங் கொண்டது
செவ்வரி யொழுகிய செழுங்கடை மழைக்கண்
அவ்வியம் அறிந்தன அதுதான் அறிந்திலள்
ஒத்தொளிர் பவளத் துள்ளொளி சிறந்த
நித்தில விளநகை நிரம்பா வளவின
புணர்முலை விழுந்தன புல்லக மகன்றது
தளரிடை நுணுகலுந் தகையல்குல் பரந்தது
குறங்கிணை திரண்டன கோலம் பொறாஅ
நிறங்கிளர் சீறடி நெய்தோய் தளிரின
தலைக்கோ லாசான் பின்னுள னாகக்
குலத்தலை மாக்கள் கொள்கையிற் கொள்ளார்
யாது நின்கருத் தென்செய் கோவென
மாதவி நற்றாய் மாதவிக் குரைப்ப
|
|
மையீர்
ஓதி வகைபெறு வனப்பின் ஐவகை வகுக்கும் பருவங்கொண்டது - கரிய ஈரிய கூந்தல் பகுதிப்படும்
அழகோடே ஐந்து வகையாகப் பகுக்கும் பருவத்தினை உற்றது, செவ்வரி ஒழுகிய செழுங்கடை மழைக்கண்
அவ்வியம் அறிந்தன அதுதான் அறிந்திலள் - சிவந்த அரிகள் படர்ந்த செழுவிய கடையினையுடைய
குளிர்ந்த விழிகள் வஞ்சம் உணர்ந்தன ஆயின் அவ் வஞ்சத்தினைத் தான் அறியாளாயினாள்,
ஒத்து ஒளிர் பவளத்து உள் ஒளி சிறந்த நித்தில இளநகை நிரம்பா அளவின - தம்முள் ஒத்து
விளங்கும் இரு பவளத்துள்ளே ஒளிமிக்க முத்துக் கோவை போலும் பற்கள் முதிராத அளவினவாயின,
புணர்முலை விழுந்தன புல்அகம் அகன்றது - தம்முட் கூடிய கொங்கைகள் நேராக எழுந்தனவில்லை,
புல்லப்படும் மார்பு பரந்தது, தளர்இடை நுணுகலும் தகை அல்குல் பரந்தது - துவளும் இடை சிறுத்த
அளவிலே அழகிய அல்குல் அகன்றது, குறங்கு இணை திரண்டன - இரண்டு துடைகளும் திரட்சியுற்றன,
கோலம் பொறா நிறங்கிளர் சீறடி நெய்தோய் தளிரின - அழகு செய்தலைப் பொறாத வண்ணம்
விளங்கும் சிறிய அடிகள் நெய் தோய்த்த தளிரினை யொத்தன, தலைக்கோல் ஆசான் பின்
உளனாகக் குலத்தலை மாக்கள் கொள்கையிற் கொள்ளார் - தலைக் கோலுடைய நட்டுவன் பயிற்றுவித்த
லின்மையின் தலைக்கோல் பெறுந்தன்மை இல்லை ஆதலான், உயர்குடிப் பிறந்தோர் முறையானே
கொள்ள எண்ணுகின்றிலர், யாது நின் கருத்து என் செய்கோ என மாதவி நற்றாய் மாதவிக்கு
உரைப்ப - ஆகலான், நினது எண்ணம் யாது யான் என்ன செய்வேன் என்று மாதவியின் நற்றாய்
மாதவிக்குக் கூற ;
மையீரோதி என்பது முதல் மாதவியின்
நற்றாய் கூற்று, மணி மேகலையின் ஓதி, மழைக்கண் என்றிங்ஙனம் விரித்துரைத்துக் கொள்க.
வகைபெறு வனப்பு என்றது குழலை ஐந்து வகையாக முடிக்குங்கால், அவ்வாற்றானே அழகு வேறுபட்டுத்
தோன்றல். அவ்வியம் அறிந்தன - அவ்வியமறியும் செவ்வியையுற்றன வென்க. விழுந்தன என்றது
நேராக எழுந்தில என்னுங் கருத்திற்று. அடிக்குக் கோலம் பஞ்சியூட்டல் முதலியன. அக்கோலம்
செய்தற்கும் பொறாத மெல்லடி என்றார். 1"பஞ்சிகொண்
டூட்டினும் பையெனப் பையெனவென், றஞ்சிப்பின் வாங்கு மடி" என்றார் பிறரும். பின்னுளனாக
என்றது சிரமஞ்செய்து முடியாமையின் என்றபடி. அவள் தலைக்கோல் பெறுந்தன்மை யில்லை யாகலான்
என இசையெச்சம் விரித்துரைக்க. மாதவி நற்றாய் - சித்திராபதி.
|
1.
நாலடி 396.
|
|