|
160
|
அருஞ்சிறை நீங்கிய ஆரிய மன்னரும்
பெருஞ்சிறைக் கோட்டம் பிரிந்த மன்னரும்
குடகக் கொங்கரும் மாளுவ வேந்தரும்
கடல்சூ ழிலங்கைக் கயவாகு வேந்தனும்
எந்நாட் டாங்கண் இமய வரம்பனின்
நன்னாட் செய்த நாளணி வேள்வியில்
வந்தீ கென்றே வணங்கினர் வேண்டத்
தந்தேன் வரமென் றெழுந்த தொருகுரல்
|
|
அருஞ்சிறை
நீங்கிய ஆரிய மன்னரும்-அப்பொழுது நீங்குதற்கரிய சிறைக் கோட்டத்தினின்றும் நீங்கிப்போந்த
ஆரிய நாட்டரசரும், பெருஞ்சிறைக் கோட்டம் பிரிந்த மன்னரும் - பெரிய காவற்கூடத்தை
நீங்கிய மற்றைய வேந்தரும், குடகக் கொங்கரும் - குடக நாட்டுக் கொங்கரும், மாளுவ வேந்தரும்
- மாளுவ தேயத்து மன்னரும், கடல்சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனும் - கடல் சூழ்ந்த இலங்கை
மன்னனாய கயவாகுவும், எம்நாட்டு ஆங்கண் இமயவரம்பனின் நல்நாட் செய்த நாள் அணி வேள்வியில்
வந்தீகென்றே வணங்கினர் வேண்ட - எமது நாட்டிடத்தே இமயவரம்பனது வெள்ளணி நாளில் யாம்
செய்யும் அழகிய நாள் வேள்வியில் வந்தருள் புரிவாயாகவெனப் பணிந்து வேண்டிய அளவிலே,
தந்தேன் வரம் என்று எழுந்தது ஒரு குரல் - அங்ஙனமே வரந் தந்தேன் என வானிடத்து ஓர்
குரல் தோன்றிற்று ;
கோட்டம் பிரிந்த மன்னர் - முன்னரே வஞ்சியிற் சிறை கிடந்த அரசர். கொங்கரும்
கயவாகுவும் கண்ணகியைத் தங்கணாட்டு வழிபட்டமை 1உரைபெறு
கட்டுரையிலும் கூறப்பட்டுளது. இமயவரம்பன் - செங்குட்டுவன் ; நன்னாள் - பிறந்த நாள்
; வேள்வியியற்றிய நாளுமாம். செய்த - செய்யும். நாள்வேள்வி - ஒரு நாளிற் செய்யப்படும்
வேள்வி. ஈண்டுக் கூறிய கயவாகு வென்பான் இலங்கைச் சரிதத்தில் வரும் கயவாகுவெனப் பெயரிய
வேந்தருள் முதல்வனாவான் ; கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் இருந்தவன்.
|
1.
சிலப், பக். 18.
|
|