7. வரந்தரு காதை

165





170

ஆங்கது கேட்ட அரசனு மரசரும்
ஓங்கிருந் தானையும் முறையோ டேத்த
வீடுகண் டவர்போல் மெய்ந்நெறி விரும்பிய
மாடல மறையோன் றன்னொடுங் கூடித்
தாழ்கழன் மன்னர் தன்னடி போற்ற

வேள்விச் சாலையின் வேந்தன் போந்தபின்



165
உரை
170

       ஆங்கு அதுகேட்ட அரசனும் அரசரும் ஓங்கு இருந் தானையும் உரையோடு ஏத்த - அவ்விடத்தே அக் குரல் கேட்ட செங்குட்டுவனும் ஏனைய அரசர்களும் மிகப் பெரிய சேனைகளும் அவள் புகழ் கூறிப் போற்ற, வீடு கண்டவர்போல் - வீட்டின்பத்தைக் கண்டார் போன்று மகிழ்ந்து, மெய்ந்நெறி விரும்பிய மாடல மறையோன்றன்னொடுங் கூடி - உண்மை நெறியினை விரும்பிய மாடலனோடுஞ் சேர்ந்து, தாழ்கழல் மன்னர் தன் அடிபோற்ற வேள்விச் சாலையின் வேந்தன் போந்த பின் - பொருந்திய கழலையுடைய அரசர் தன்னுடைய அடிகளைத் துதிக்க யாகசாலைக்கண் மன்னவன் புகுந்த பின்னர் ;

       வீடு - முத்தி. மெய்ந்நெறி - வீட்டுநெறி. வேந்தன் பத்தினிக் கோட்டத்தினின்றும் வேள்விச்சாலையிற் போந்த பின் என்க.