|
175
180
185 |
யானுஞ் சென்றேன் என்னெதி ரெழுந்து
தேவந் திகைமேல் திகழ்ந்து தோன்றி
வஞ்சி மூதூர் மணிமண் டபத்திடை
நுந்தை தாணிழ லிருந்தோய் நின்னை
அரைசுவீற் றிருக்குந் திருப்பொறி யுண்டென்று
உரைசெய் தவன்மே லுருத்து நோக்கிக்
கொங்கவிழ் நறுந்தார்க் கொடித்தேர்த் தானைச்
செங்குட் டுவன்றன் செல்லல் நீங்கப்
பகல்செல் வாயிற் படியோர் தம்முன்
அகலிடப் பாரம் அகல நீக்கிச்
சிந்தை செல்லாச் சேணெடுந் தூரத்து
அந்தமி லின்பத் தரசாள் வேந்தென்று
என்திறம் உரைத்த இமையோ ரிளங்கொடி
கன்திறம் உரைத்த தகைசால் நன்மொழி
தெரிவுறக் கேட்ட திருத்தகு நல்லீர்
|
|
யானும்
சென்றேன் - யான் பத்தினிக் கோட்டத்திற்குச் சென்றேனாக, என் எதிர் எழுந்து தேவந்திகை
மேல் திகழ்ந்து தோன்றி - அங்ஙனம் சென்ற என்னெதிரே தேவந்தி மீது விளங்கி வெளிப்பட்டெழுந்து,
வஞ்சி மூதூர் மணி மண்டபத்திடை - வஞ்சி நகரத்தின் கோயில் அத்தாணி மண்டபத்தில்,
நுந்தை தாள் நிழல் இருந்தோய் நின்னை - நின் தந்தையிடத்திருந்தோயாகிய உன்னை நோக்கி,
அரைசு வீற்றிருக்கும் திருப்பொறி உண்டு என்று உரை செய்தவன்மேல் உருத்து நோக்கி -
அரசனாக வீற்றிருக்கும் அழகிய வடிவிலக்கணம் நின்னிடத்து உண்டு என உரைத்த கணிவன்மீது
வெகுண்டு நோக்கி, கொங்கு அவிழ் நறுந்தார்க் கொடித்தேர்த் தானைச் செங்குட்டுவன்
றன் செல்லல் நீங்க - மணம் விரிந்த நறிய மாலையினையும் கொடி கட்டிய தேரினையும் நால்வகைப்
படையினையும் உடைய தன் முன்னோனாகிய செங்குட்டுவனது துன்பம் ஒழியுமாறு, பகல் செல்வாயில்
படியோர் தம்முன் - ஞாயிறு தோன்றும் குணக்காகிய திக்கினாற் பெயருடைய குணவாயிலின்கண்
முனிவர்கள் எதிரே, அகல் இடப் பாரம் அகல நீக்கி - அகன்ற இடத்தினையுடைய இந் நிலந்
தாங்கும் சுமை தன்னை விட்டொழிய விலக்கி, சிந்தை செல்லாச் சேண் நெடுந்தூரத்து அந்தம்இல்
இன்பத்து அரசு ஆள் வேந்து என்று - உள்ளமும் சென்று அறியவொண்ணா மிக்க நெடுந் தூரத்திலுள்ள
முடிவில்லாத இன்பத்தினையுடைய வீட்டுலக அரசினையாளும் மன்னவனாயினை என்று, என் திறம்
உரைத்த இமையோர் இளங்கொடிதன் திறம் உரைத்த தகை சால் நல்மொழி - என் வரலாறு கூறிய
விண்ணவர் மகளாம் கண்ணகியின் தன்மைகளை விளக்கிய தகுதி மிக்க நல்லுரையை, தெரிவுறக்
கேட்ட திருத்தகு நல்லீர் - விளங்கக் கேட்ட அழகு தக்க நன்மையுடையீர் ;
பொறி - இலக்கணம் ; ஊழுமாம். செல்லல்
நீங்க - துன்பம் வாராதொழிய வென்க. பகல் - ஞாயிறு ; பகல் செல்வாயில்-குண வாயில்
என்றபடி. படியோர் - படிமையோர் ; தவவொழுக்கத்தையுடைய முனிவர். 'வஞ்சி மூதூர்' என்பது
முதல் 'அந்தமிலின்பத்தர சாள் வேந்து' என்பதுவரை தம்மை நோக்கித் தெய்வம் கூறியதனை
இளங்கோவடிகள் கொண்டு கூறினார். இமையோர் இளங்கொடி-தெய்வ மகள். எழுந்து தோன்றி
வேந்தென்று என் திறமுரைத்த இளங்கொடி என்க.
மணி மண்டபத்திடை நின் தந்தையாகிய
சேரலனிடத்தே நீயிருக்க, ஒரு நிமித்திகன் ஆங்கு வந்து நின்னை நோக்கி, நின்னிடை
அரசு வீற்றிருக்கும் இலக்கணம் உண்டென்று கூற, அரசாள என் தமையனாகிய செங்குட்டுவனிருக்க
நீ இவ்வாறு முறைமை கெடக் கூறினாய் என்று அவனை வெகுண்டு நோக்கிச் செங்குட்டுவனுக்குத்
துன்பம் வராதபடி திருக்கணவாயி லிடத்துத் துறந்து வதிந்த முனிவர்முன் போந்து இவ்வுலகினையாளும்
அரசினை யொழித்து முத்தியாகிய அரசினையாளத் தக்க வேந்தனாயினை யல்லையோ என்று முன்னர்
நிகழ்ந்ததும் மேல் நிகழ்வதுமாகிய என் திறமுரைத்த இமையோ ரிளங் கொடியின் திறமுரைத்தனைத்
தெரிவுறக் கேட்ட திருத்தகு நல்லீர் என்க. |
|