7. வரந்தரு காதை






190





195





200

பரிவும் இடுக்கணும் பாங்குற நீங்குமின்
தெய்வந் தெளிமின் தெளிந்தோர்ப் பேணுமின்
பொய்யுரை அஞ்சுமின் புறஞ்சொற் போற்றுமின்
ஊனூண் துறமின் உயிர்க்கொலை நீங்குமின்

தானஞ் செய்ம்மின் தவம்பல தாங்குமின்
செய்ந்நன்றி கொல்லன்மின் தீநட் பிகழ்மின்
பொய்க்கரி போகன்மின் பொருண்மொழி நீங்கன்மின்
அறவோ ரவைக்களம் அகலா தணுகுமின்
பிறவோ ரவைக்களம் பிழைத்துப் பெயர்மின்

பிறர்மனை அஞ்சுமின் பிழையுயிர் ஓம்புமின்
அறமனை காமின் அல்லவை கடிமின்
கள்ளுங் களவுங் காமமும் பொய்யும்
வெள்ளைக் கோட்டியும் விரகினில் ஒழிமின்
இளமையும் செல்வமும் யாக்கையும் நிலையா

உளநாள் வரையாது ஒல்லுவ தொழியாது
செல்லுந் தேஎத்துக் குறுதுணை தேடுமின்
மல்லன்மா ஞாலத்து வாழ்வீ ரீங்கென்.



186
உரை
202

       பரிவும் இடுக்கணும் பாங்குற நீங்குமின் பிறர்க்குக் கவலையும் துன்பமும் விளைத்தலை முறைமையால் விட்டொழிமின், தெய்வம் தெளிமின் - கடவுள் உண்டென வுணர்மின், தெளிந்தோர்ப் பேணுமின் - அங்ஙனம் கடவுளை யுணர்ந்தோரை விரும்புமின், பொய்யுரை அஞ்சுமின் - பொய்கூறற்கு அஞ்சுமின், புறஞ்சொல் போற்றுமின் - புறங்கூறுதலைப் பரி கரிமின், ஊன் ஊண் துறமின் - ஊன் உண்ணுதலை விலக்குமின், உயிர்க்கொலை நீங்குமின் - உயிர்களைக் கொலை செய்தலை ஒழிமின், தானம் செய்ம்மின் - தானத்தினை மேற்கொண்டு செய்ம்மின், தவம் பல தாங்குமின் - தவம் பலவற்றையும் மேற்கொண்மின், செய்ந்நன்றி கொல்லன்மின் - பிறர் செய்த உதவியை மறவன்மின், தீ நட்பு இகழ்மின் - தீயோரது தொடர்பினை எள்ளி ஒதுக்குமின், பொய்க் கரி போகன்மின் - பொய்ச் சான்று கூறும் நெறியிற் செல்லன்மின், பொருள் மொழி நீங்கன்மின் - உண்மை மொழியினை விட்டு நீங்கன்மின், அறவோர் அவைக்களம் அகலாது அணுகுமின் - அறநெறிச் செல்லும் சான்றோர் அவையினை நீங்காது அடைமின், பிறவோர் அவைக்களம் பிழைத்துப் பெயர்மின் - மறநெறிச் செல்லுந் தீயோர் அவைக்களத்தினின்றுந் தப்பி நீங்குமின், பிறர்மனை அஞ்சுமின் - பிறர்மனைவியை விரும்புதலை அஞ்சுமின், பிழை உயிர் ஓம்புமின் - துன்பமுற்ற உயிர்களைக் காமின், அறமனை காமின் - இல்லறத்தைப் போற்றுமின், அல்லவை கடிமின் - பாவச் செயலை நீக்குமின், கள்ளும் களவும் காமமும் பொய்யும் வெள்ளைக் கோட்டியும் விரகினில் ஒழிமின் - கள்ளும் களவும் காமமும் பொய்யும் பயனில சொல்லும் கூட்டமும் என்னும் இவற்றை ஒழிக்கும் உபாயத்தால் ஒழித்திடுமின், இளமையும் செல்வமும் யாக்கையும் நிலையா - இளமை பொருள் உடல் இவை மூன்றும் நிலையற்றன, உளநாள் வரையாது - அறுதியிட்டுள்ள வாழ்நாள் சென்று கழிதலைக் கைவிடாது. ஒல்லுவது ஒழியாது - சாரக்கடவதாய துன்பம் சாராது நீங்காது ஆகலான், செல்லும் தேஎத்துக்கு உறுதுணை தேடுமின் - இறந்த பின் செல்லும் மறுமை உலகிற்கு உற்ற துணையாகிய அறத்தினைத் தேடுமின், மல்லல் மா ஞாலத்து வாழ்வீர் ஈங்கு என் - வளமிக்க இப்பெரிய வுலகத்து வாழும் மக்களை யென்றா ரென்க.

போற்றுதல் - உண்டாகாது பாதுகாத்தல். தீ நட்பு - தீயோர் நட்பு. பொருண் மொழி - முனிவர் கூறும் பயனுள்ள மொழியுமாம். பிழைஉயிர் - மரிக்கிற உயிரென்பர் அரும்பதவுரையாசிரியர். அறமனை - மனையறம். விரகு - சூழ்ச்சி ; சதுரப்பாடுமாம். நன்மொழி தெரிவுறக் கேட்ட நல்லீர் என்றமையால் ஈண்டுத் தொகுத்துரைப்பன வெல்லாம் அதன் துணிபொருளா மென்பது பெற்றாம். ஞாலத்து வாழ் வீராகிய நல்லீர் என்க. ஞாலத்து வாழ்வீர்என வாழ்த்தி முடித்தாருமாம். உளநாள் செல்லுதல் தவிர்தல் இல்லை என்பது, 1"வைகலும் வைகல் ... வைத்துணராதார்" என்பதனாலும், ஒல்லுவதொழியாமை, 2"உறற்பால நீக்க லுறுவார்க்கு மாகா" என்பதனாலும் அறியப்படும். 3"கள்ளும் பொய்யுங் காமமுங் கொலையும், உள்ளக்களவுமென் றுரவோர் துறந்தவை" 4இளமையு நில்லா யாக்கையு நில்லா, வளவிய வான்பெருஞ் செல்வமு நில்லா" 5"தன்னொடு செல்வது வேண்டி னறஞ் செய்க" என்பன ஈண்டு அறியற்பாலன. இளங்கோவடிகள், என்றிற முரைத்த இமையோ ரிளங்கொடிதன்றிற முரைத்த