7. வரந்தரு காதை



25



வருகவென் மடமகள் மணிமே கலையென்

றுருவி லாள னொருபெருஞ் சிலையொடு
விரைமலர் வாளி வெறுநிலத் தெறியக்
கோதைத் தாமங் குழலொடு களைந்து
போதித் தானம் புரிந்தறம் படுத்தனள்



24
உரை
28

       வருக என் மடமகள் மணிமேகலை என்று - என் இளமகள் மணிமேகலை என்னிடம் வருவாளாகவென்று அழைத்து, உருஇல் ஆளன் ஒரு பெரும் சிலையொடு விரைமலர் வாளி வெறு நிலத்து எறிய - அநங்கன் தனது ஒப்பற்ற பெரிய வில்லுடனே மணந் தங்கும் மலர் அம்புகளையும் வறிய நிலத்தின்கண் எறிந்து செயலறும் வண்ணம், கோதைத் தாமம் குழலொடு களைந்து போதித் தானம் புரிந்து அறம்படுத்தனள் - ஒழுங்குபட்டமாலையைக் கூந்தலோடே நீக்கிப் புண்ணியதானஞ் செய்து துறவறத்துப் படுத்தாள் ;

       உருவிலாளன் - மன்மதன். அவளாற் பலரையும் வெல்ல நினைத்த அவன், அவள் துறவுபூண்டமையான், தன் வில்லம்புகளை வெறுநிலத் தெறிந்தான் என்க. புத்த சமயத்துத் துறவு பூணும் மகளிரும் குழல் களைதல் மரபுபோலும் ; அன்றேல் குழலினின்றுங் களைந்தென்னல் வேண்டும் ; முன்னரும், 1"கோதைத் தாமங் குழலொடு களைந்து, போதித் தானம் புரிந்தறங் கொள்ளவும்" என்றார்.


1. சிலப். 27 :