|
30
35 |
ஆங்கது கேட்ட அரசனும் நகரமும்
ஓங்கிய நன்மணி யுறுகடல் வீழ்த்தோர்
தம்மிற் றுன்பந் தாம்நனி யெய்தச்
செம்மொழி மாதவர் சேயிழை நங்கை
தன்றுற வெமக்குச் சாற்றின ளென்றே
அன்புறு நன்மொழி அருளொடுங் கூறினர்
பருவ மன்றியும் பைந்தொடி நங்கை
திருவிழை கோலம் நீங்கின ளாதலின்
அரற்றினென் என்றாங் கரசற் குரைத்தபின்
|
|
ஆங்கு
அது கேட்ட அரசனும் நகரமும் - அப்பொழுது அத் துறவினைக் கேள்வியுற்ற வேந்தனும் நகரத்தோரும்,
ஓங்கிய நல்மணி உறுகடல் வீழ்த்தோர் தம்மின் துன்பம் தாம் நனி எய்த - உயர்வாகிய
நல்ல மாணிக்கத்தை ஆழம் மிக்க கடலிடைப் போகட்டார் போன்று மிக்க துன்பத்தினை
அடைய, செம்மொழி மாதவர் - உண்மைக் கூற்றினையுடைய மாதவராகிய அறவணவடிகள், சேயிழை
நங்கை தன் துறவு எமக்குச் சாற்றினள் என்றே அன்புஉறு நல்மொழி அருளொடுங் கூறினர் -
மணிமேகலை தன்னுடைய துறவினை எமக்கு அறிவித்தாளென்று அவளது அன்பு மிக்க நல்லுரையை எம்மிடத்து
அருளோடும் உரைத்தார், பருவம் அன்றியும் பைந்தொடி நங்கை திருவிழை கோலம் நீங்கினள்
ஆதலின் - துறத்தற்குரிய பருவ காலத்தன்றியேயும் பசிய தொடியணிந்த மணிமேகலை திருமகளும்
விரும்பும் அழகின் நீங்கினாளாகலான், அரற்றினென் என்று ஆங்கு அரசற்கு உரைத்தபின்
- வாய்விட்டுப் புலம்பினேன் என அவ்விடத்து மன்னற்குக் கூறிய பின்னர் ; இவன் துறவு
பூண்டமையான் மணியைக் கடலிடை வீழ்த்தோர் போன்று அரசனும் நகரமும் வருந்தினர் என்க.
1"அரும்பெறன்
மாமணி, ஓங்குதிரைப் பெருங்கடல் வீழ்த்தோர் போன்று, மைய னெஞ்சமொடு" என்றார் சாத்தனாரும்.
செம்மொழி - உண்மை மொழி. திருவிழை கோலம் நீங்கினள் என்றது துறவுக்கோலம் கொண்டதனை
என்க. சித்திராபதி மாதவிக் குரைத்ததும் மாதவி தன்னைத் தவநெறிப் படுத்ததுமாகிய தனது
துறவின் செய்தியை மணிமேகலை எமக்கு அறிவித்தாளென்று அறவணவடிகள் கூறினரெனவும், அவள்
பருவமன்றியும் கோலம் நீங்கினளாதலின் அரற்றினே னெனவும் தேவந்தி செங்குட்டுவற்குக்
கூறினாளென்க.
|
1.
மணி. 2 : 72--4.
|
|