7. வரந்தரு காதை




55





60





65





70

மங்கல மடந்தை கோட்டத் தாங்கண்
செங்கோட் டுயர்வரைச் சேணுயர் சிலம்பிற்

பிணிமுக நெடுங்கற் பிடர்த்தலை நிரம்பிய
அணிகயம் பலவுள ஆங்கவை யிடையது
கடிப்பகை நுண்கலுங் கவிரிதழ்க் குறுங்கலும்
இடிக்கலப் பன்ன இழைந்துகு நீரும்
உண்டோர் சுனையத னுள்புக் காடினர்

பண்டைப் பிறவிய ராகுவ ராதலின்
ஆங்கது கொணர்ந்தாங் காயிழை கோட்டத்
தோங்கிருங் கோட்டி யிருந்தோய் உன்கைக்
குறிக்கோட் டகையது கொள்கெனத் தந்தேன்
உறித்தாழ் கரகமும் உன்கைய தன்றே

கதிரொழி காறுங் கடவுட் டன்மை
முதிரா தந்நீர் முத்திற மகளிரைத்
தெளித்தனை யாட்டினிச் சிறுகுறு மகளிர்
ஒளித்த பிறப்பின ராகுவர் காணாய்
பாசண் டன்யான் பார்ப்பனி தன்மேல்

மாடல மறையோய் வந்தே னென்றலும்



53
உரை
70

       மங்கல மடந்தை கோட்டத்து ஆங்கண் செங்கோட்டு உயர் வரைச்சேண் உயர் சிலம்பில் - செவ்விய முடிகளையும் நீண்ட மூங்கிலையும் உடைய மிக வுயர்ந்த மலையில் மங்கலா தேவியின் கோயிலையுடைய அவ்விடத்தே, பிணிமுக நெடுங்கல் பிடர்த்தலை - முருகக் கடவுளின் யானைபோலும் நெடியகல்லின் பிடர்போலு மிடத்தில், நிரம்பிய அணி கயம் பல உள - நீர் நிறைந்த அழகிய சுனைகள் பலவுள்ளன, ஆங்கு அவை இடையது கடிப்பகை நுண் கலும் கவிர் இதழ்க் குறுங்கலும் இடிக்கலப்பு அன்ன இழைந்து உகுநீரும் உண்டு ஓர் சுனை - அவ்விடத்தே அவற்றின் நடுவணதாய் வெண்சிறு கடுகு போன்ற நுண்ணிய கற்களையும் முருக்கம் பூவினை யொத்த நிறமுடைய சிறிய கற்களையும் மாவைக் கரைத்தாலொத்த நெகிழ்ந்து சொரி கின்றநீரினையும் உடைய ஓர்சுனை உள்ளது, அதன் உள்புக்கு ஆடினர் பண்டைப் பிறவியர் ஆகுவர் - அச் சுனையினுள்ளே சென்று மூழ்கினோர் முன்னைப் பிறவியின் உணர்ச்சி யுடையராவர், ஆதலின் ஆங்கு அது கொணர்ந்து ஆங்கு ஆயிழை கோட்டத்து ஓங்கு இருங்கோட்டி இருந்தோய் - ஆகலான், கண்ணகி கோயிலின் உயர்ந்த பெரிய வாயிலில் இருந்தோய் அச் சுனை நீரைக் கொண்டுவந்து, உன் கை-நின் கையிலே, குறிக்கோள் தகையது கொள்கெனத் தந்தேன் - ஈது கருதிக் கொள்ளத்தகும் இயல்பினை யுடைத்து கொள்வாய் எனக் கொடுத்தேன், உறித்தாழ் கரகமும் உன் கையது அன்றே - உறியிடத்துத் தங்கிய அந்நீருடைய கமண்டலமும் நின்கை யிடத்தது, கதிர்ஒழிகாறும் கடவுள் தன்மை முதிராது - அந்நீரின் தெய்வத்தன்மை ஞாயிறு திங்கள் உள்ள அளவும் ஒழியாது, அந்நீர் முத்திற மகளிரைத் தெளித்தனை ஆட்டின் இச்சிறு குறுமகளிர் ஒளித்த பிறப்பினர் ஆகுவர் காணாய் - அதனால் இம்மூன்று மங்கையரையும் அந்நீரைக் தெளித்து ஆட்டினால் இக் குறிய சிறுமியர் முன்னைப்பிறப் புணர்ச்சியினராவர், இதனை நீ காண்பாய், பாசண்டன் யான் பார்ப்பனிதன்மேல் மாடல மறையோய் வந்தேன் என்றலும் - மாடலனாகிய அந்தணனே பாசண்டச் சாத்தனாகிய யான் பார்ப் பனியாகிய தேவந்திகை யிடத்தே உற்றேன் என்று கூறிய வளவில்;

       மங்கல மடந்தை - மங்கலா தேவி, கண்ணகி. கோடு - சிகரம். சிலம்பின் பிடர்த்தலையில் பல சுனை உள்ளன ; அவற்றின் நடுவணதோர் சுனை உண்டு ; அதனுள் ஆடின் முற்பிறப் புணர்ச்சி யுண்டாம் எனக் கூறினாள். கடிப்பகை - வெண் சிறுகடுகு. பேய்க்குப் பகையாயது என்பது பொருள். 1"அரவாய்க் கடிப் பகையையவிக் கடிப் பகை" என்றார் பிறரும். கவிர் - முண்முருக்கு. தேவந்திமேலுற்ற பாசண்டச் சாத்தன், மாடலனை நோக்கி நின்னிடத்துக் கரகந்தந்தேன் என்றான். கோட்டின்-கோயில் வாயில். கதிர் - ஞாயிறு, திங்கள், தெளித்தனை, முற்றெச்சம். ஒளித்த பிறப்பு - மறைந்த பிறப்பு ; முன்பிறப்பு. பிறப்பினர்-பிறப்பின் உணர்ச்சியினர்.


1. மணி. 7: 73.