|
75
80
85
|
மாலதி யென்பாள் மாற்றாள் குழவியைப்
பால்சுரந் தூட்டப் பழவினை யுருத்துக்
கூற்றுயிர் கொள்ளக் குழவிக் கிரங்கி
ஆற்றாத் தன்மையள் ஆரஞ ரெய்திப்
பாசண் டன்பாற் பாடு கிடந்தாட்
காசில் குழவி யதன்வடி வாகி
வந்தனன் அன்னைநீ வான்துய ரொழிகெனச்
செந்நிறம் புரிந்தோன் செல்லல் நீக்கிப்
பார்ப்பனி தன்னொடு பண்டைத் தாய்பாற்
காப்பியத் தொல்குடிக் கவின்பெற வளர்ந்து
தேவந் திகையைத் தீவலஞ் செய்து
நாலீ ராண்டு நடந்ததற் பின்னர்
மூவா இளநலங் காட்டியென் கோட்டத்து
நீவா வென்றே நீங்கிய சாத்தன்
|
|
மாலதி
என்பாள் மாற்றாள் குழவியைப் பால் சுரந்து ஊட்ட - மாலதி எனப்படுவாளோர் பார்ப்பனி
தன் மாற்றாளுடைய குழவிக்குத் தன் முலை பால் ஊறப்பெற்று அருத்த, பழவினை உருத்துக் கூற்றுயிர்கொள்ள
- அக்காலை முன்னைத் தீவினை தோன்றலானே பால் விக்க அது காரணமாக அக்குழவியின் உயிரைக்
கூற்றுவன் கவர்ந்து செல்ல, குழவிக்கு இரங்கி ஆற்றாத்தன்மையள் ஆர்அஞர் எய்திப் பாசண்டன்பால்
பாடு கிடந்தாட்கு - அங்ஙனம் இறந்த குழவியின்பொருட்டு வருந்தி அதனைப் பொறாத இயல்பினளாய்
மிக்க துன்பமுற்றுப் பாசண் டச்சாத்தனிடத்து வரங் கிடந்தாளுக்கு, ஆசுஇல் குழவி அதன்
வடிவு ஆகி வந்தனன் அன்னை நீ வான் துயர் ஒழிகென - அன்னையே நீ மிக்க துயரொழிக வென்று
கூறிக் குற்றமற்ற அக்குழவியின் உருக்கொடு வந்து, செந்திறம் புரிந்தோன் செல்லல் நீக்கி
- அருளை விரும்பிய சாத்தன் அவள் துன்பத்தினைப்போக்கி, பார்ப்பனி தன்னொடு பண்டைத்
தாய் பால் காப்பியத் தொல் குடி கவின் பெற வளர்ந்து-மாலதியோடே அவள் மாற்றாளாகிய
தாயிடத்தே பழைய காப்பியக் குடியிலே அழகுபெற வளர்ந்து, தேவந்திகையைத் தீவலம் செய்து
- தேவந்தியை மணந்து, நால் ஈராண்டு நடந்ததன் பின்னர் - எட்டியாண்டுகள் கழிந்த பின்னர்,
மூவா இளநலங் காட்டி என் கோட்டத்து நீவா என்றே நீங்கிய சாத்தன் - என்றும் அழியாத
தன் இளமையின் அழகினைத் தோற்றுவித்து என் கோயிற்கண் நீ வருவாய் எனக் கூறி அவளிற்
பிரிந்த சாத்தனாகிய அவன் ;
பால் ஊட்ட - பாலைச் சங்கால் ஊட்ட
எனலும் அமையும். பாசண்டன் - சாத்தனாராகிய ஐயன், பாடு கிடத்தல் - வரம் வேண்டிக்
கிடத்தல் ; 1"பன்னாளாயினும்
பாடு கிடப்பேன்" என வருதல் காண்க. அன்னை, விளி, செந்திறம் - அருள். பண்டைத்தாய்
- மாலதியின் மாற்றாள். இவனை அவள் புதல்வனாகக் கருதுதலான் பண்டைத் தாய் என்றார்.
காப்பியக் குடியென்பது சீகாழிக்குத் தென் கிழக்கிலுள்ளதாகிய ஓரூர். மூவாஇளநலம் - தெய்வ
வடிவு; 2"மணங்கமழ்
தெய்வத் திளநலங் காட்டி" என்பது காண்க. தீவலஞ் செய்தல் - மணத்தல், சாத்தன், சுட்டு.
செந்திறம் புரிந்தோன் அன்னாய் துயரொழிகெனக் குழவி வடிவாகிச் செல்லல் நீக்கி வளர்ந்து
தீவலஞ் செய்து இளநலங் காட்டி நீங்கியவன் என்க. இவ்வரலாற்றினை, 3"மாலதி
மாற்றாள் . . . நீவாவென வுரைத்து நீங்குதலும்" எனக் கனாத்திறமுரைத்த காதையிற் கூறினமையாலும்
அறிக.
|
1.
மணி. 18 ; 158. 2.
முருகு. 190. 3.
சிலப். 9 ; 5-36.
|
|