|
5
10
15
|
குமரி வேங்கடங் குணகுட கடலா
மண்டிணி மருங்கிற் றண்டமிழ் வரைப்பிற்
செந்தமிழ் கொடுந்தமி ழென்றிரு பகுதியின்
ஐந்திணை மருங்கின் அறம்பொரு ளின்பம்
மக்கள் தேவ ரெனவிரு சார்க்கும்
ஒத்த மரபின் ஒழுக்கொடு புணர
எழுத்தொடு புணர்ந்தசொல் லகத்தெழு பொருளை
இழுக்கா யாப்பின் அகனும் புறனும்
அவற்று வழிப்படூஉஞ் செவ்விசிறந் தோங்கிய
பாடலும் எழாலும் பண்ணும் பாணியும்
அரங்கு விலக்கே ஆடலென் றனைத்தும்
ஒருங்குடன் தழீஇ உடம்படக் கிடந்த
வரியுங் குரவையுஞ் சேதமு மென்றிவை
தெரிவுறு வகையாற் செந்தமி ழியற்கையில்
ஆடிநன் நிழலின் நீடிருங் குன்றம்
காட்டு வார்போற் கருத்துவெளிப் படுத்து
மணிமே கலைமேல் உரைப்பொருள் முற்றிய
சிலப்பதி காரம் முற்றும்.
|
|
(குமரி ... சிலப்பதிகாரம்
முற்றும்.)
|
குமரி வேங்கடம் குண குட கடலா மண்திணி
மருங்கில் தண்டமிழ் வரைப்பில் - அணுக்கள் செறிந்த நிலவுலகிலே தெற்கிற் குமரியும்
வடக்கில் வேங்கடமும் கிழக்கிலும் மேற்கிலும் கடலும் எல்லையாக அவற்றிடைப்பட்ட தண்டமிழ்
நாட்டில், செந்தமிழ் கொடுந்தமிழ் என்று இரு பகுதிகள் ஐந்திணை மருங்கின் - செந்தமிழ்நாடு
கொடுந்தமிழ் நாடு என்னும் இரு பகுதியினும் அமைந்த குறிஞ்சி முல்லை பாலை மருதம் நெய்தல்
என்னும் ஐந்து நிலத்தினும் வாழ்வார்க்கு, அறம்பொருள் இன்பம் மக்கள் தேவர் என இரு
சார்க்கும் ஒத்த மரபின் ஒழுக்கொடு புணர - அறம்பொருள் இன்பமாகிய உறுதிப் பொருள்கள்
மக்கள் தேவர் என்னும் இரு பகுதிக்கும் அமைந்த தன்மையையுடைய ஒழுக்கத்துடன் பொருந்த,
எழுத்தொடு புணர்ந்த சொல்லகத்து எழு பொருளை இழுக்கா யாப்பின் - எழுத்தும் அதனாலாய
சொல்லும் அதன்கட்டோன்றும் பொருளுமாகிய அம் மூன்றிலக்கணத்தினின்றும் வழுவுதலில்லாத
செய்யுட்களால், அகனும் புறனும் அவற்று வழிப்படூஉம் செவ்வி சிறந்தோங்கிய பாடலும் -
அகமும் புறமுமாகிய அவற்றின் வழிப்படும் அழகு மிக்குயர்ந்த பாட்டும், எழாலும் பண்ணும்
பாணியும் - யாழும் பண்ணும் தாளமும், அரங்கு விலக்கே
ஆடல் என்று அனைத்தும் - அரங்கும் விலக்குறுப்பும்
கூத்தும் என்ற அனைத்தையும், ஒருங்குடன் தழீஇ - ஒரு சேரத் தழுவி, உடம்படக் கிடந்த வரியும்
குரவையும் சேதமும் என்றிவை - அவற்றுடன் இசைவுபெறக் கிடந்த வரியும் குரவையும் சேதமும்
என்னும் இவைகள், தெரிவுறு வகையால் - விளங்கும் வகையால், செந்தமிழ் இயற்கையின் -
செந்தமிழின் மரபாலே, ஆடி நல் நிழலின் நீடு இருங்குன்றம் காட்டுவார்போல் - ஆடியின்
நல்ல நிழலில் உயர்ந்த பெரிய மலையினைக் காட்டுவார் போல, கருத்து வெளிப்படுத்து -
கருத்துக்களைத் தோற்றுவித்து, மணிமேகலைமேல் உரைப் பொருள் முற்றிய சிலப்பதிகாரம்
முற்றும் - மணிமேகலை யென்னும் தொடர்நிலைச் செய்யுளோடு கூடி உரைக்கப்படும் பொருள்
முடிந்த சிலப்பதிகாரக் காப்பியம் முற்றுதலுற்றது என்க.
அறம் பொரு ளின்பம் ஒழுக்கொடு புணர
எனவும், பாடல் முதலியன தெரிவுறு வகையால் எனவும், யாப்பின் இயற்கையின் கருத்து வெளிப்படுத்து
எனவும் இயையும். மலையின் வடிவு முழுதும் சிறிய ஆடி நிழலில் விளங்கித் தோன்றுமாறு போலப்
பரந்த பொருளெல்லாம் சுருங்க வெளிப்படுமாறு செய்தென்க. சேதம் என்பது விலக்குறுப்புக்களிலொன்று
; விலக்கும் சேதமும் வேறு வேறாகவும், சேதம் என்பதனை வரி குரவை என்பவற்றோடு சேர்த்தும்
கூறியிருப்பதன் கருத்துப் புலனாகவில்லை. நான்கு பொருள்களுள் சிலப்பதிகாரம் அறம் முதலிய
மூன்றனையும், மணிமேகலை வீட்டினையுங் கூறுதலின் மணிமேகலைமேல் உரைப்பொருள் முற்றிய என்றார்.
|
இளங்கோவடிகள்
இயற்றிய சிலப்பதிகாரத்தின்
மூன்று காண்டத்திற்கும்
பண்டித, நாவலர் ந. மு. வேங்கடசாமி நாட்டார்
இயற்றிய உரை முற்றிற்று.
|
|