5. அடைக்கலக் காதை



30





35
கிடையிருள் யாமத் தெறிதிரைப் பெருங்கடல்
உடைகலப் பட்ட எங்கோன் முன்னாள்
புண்ணிய தானம் புரிந்தோ னாகலின்

நண்ணுவழி இன்றி நாள்சில நீந்த
இந்திரன் ஏவலின் ஈங்கு வாழ்வேன்
வந்தேன் அஞ்சல் மணிமே கலையான்
உன்பெருந் தானத் துறுதி யொழியாது
துன்ப நீங்கித் துயர்க்கட லொழிகென

விஞ்சையிற் பெயர்த்து விழுமந் தீர்த்த
எங்குல தெய்வப் பெயரீங் கிடுகென


28
உரை
37

      (முன்நாள) இடை இருள் யாமத்து எறிதிரைப் பெருங் கடல் - முன்னாளில் இருள் நிறைந்த நடுயாமத்தில் அலை மோதும் பெரிய கடலினிடத்து, உடைகலப்பட்ட எங்கோன் - மரக்கலம் உடையப்பட்ட எம் முன்னோன், முன்நாள் புண்ணிய தானம் புரிந்தோன் ஆகலின் - முற்பிறப்பில் அறத்தினையும் தானத்தினையும் செய்தோனாகலான், நண்ணுவழி இன்றி நாள் சில நீந்த-கரையைக் கிட்டும் இடமின்றியே சின்னாட்கள் நீந்திச் செல்ல, இந்திரன் ஏவலின் ஈங்கு வாழ்வேன் வந்தேன் அஞ்சல் மணிமேகலை யான் - ஓர் தெய்வம் தோன்றி, யான் மணிமேகலை எனப்படுவேன் இத் தீவினுள்ளாரை அசுரர் நலியாதிருத்தற் பொருட்டு இந்திரன் ஏவலால் ஈங்கு வாழுவேன் அவ் விந்திரன் ஏவலான் நின் துயர் ஒழிக்க இவண் வந்தேன் அஞ்சற்க, உன் பெருந் தானத்து உறுதி ஒழியாது - நினது பெரிய தானத்தின் பயன் நின்னைவிட்டு நீங்காது, துன்பம் நீங்கித் துயர்க்கடல் ஒழிகென - ஆகலான் கடலில் நீந்திய இத்துன்பத்தினின்றும் நீங்கித் துயர்க்கடலை ஒழிவாயாகவென்று கூறி, விஞ்சையில் பெயர்த்து விழுமம் தீர்த்த - மந்திரத்தினால் கரையை மீண்டும் அடையச் செய்து துன்பம் ஒழித்த, எம் குலதெய்வப்பெயர் ஈங்கு இடுகென - எமது குலதெய்வத்தின் பெயரை இங்கு நீவிர் இடுமின் என்று நீ சொல்ல;

      யாமம் - இரவு; 1'யாமமும் பகலு மறியா மையால்' என்றார் பிறரும். முன்னாள் என்பதனை உடைகலப்பட்ட என்பதனொடும், புண்ணியதானம் என்பதனொடும் கூட்டுக. புண்ணியதானம் - புண்ணியமும் தானமும். நண்ணுவழி இன்றி என்பதற்குத் தன்னை அணுகும் இடையூறு ஓரிடத்துமின்றி எனலுமாம். நாள் சில நீந்த-ஏழு நாட்கள் நீந்த ; (மணி 29 : 18--9. வரி காண்க.) இந்திரன் ஏவலின் வாழ்வேன் இந்திரன் ஏவலின் வந்தேன் என்க. உறுதி - பயன். பெயர்த்து - ஒரு திடரிற் பெயர்த்து எனவு முரைப்பர்.

      வாழ்வேன் வந்தேன் அஞ்சல் உறுதி ஒழியாது நீங்கி ஒழிகெனப் பெயர்த்துத் தீர்த்த குலதெய்வம் என்க.

1 சீவக. 135.