2. மனையறம்படுத்த காதை




10
குலத்திற்குன்றாக் கொழுங்குடிச் செல்வர்
அத்தகு திருவின் அருந்தவ முடித்தோர்

உத்தர குருவி னொப்பத் தோன்றிய
கயமலர்க் கண்ணியும் காதற் கொழுநனும்


8
உரை
11

       குலத்திற் குன்றாக் கொழுங்குடிச் செல்வர் - குல வொழுக்கத்திற் குன்றாத நற்குடியினராகிய செல்வர்கட்கு, அத்தகு திருவின் அருந்தவம் முடித்தோர் உத்தர குருவின் ஒப் பத்தோன்றிய - அங்ஙனம் அறத்தின் ஈட்டிய பொருளாலே தலைப்படுதானத்தைச் செய்தோர் எய்தும் உத்தரகுருவை அந் நகர்ஒக்கும்படி தோன்றிய, கயமலர்க் கண்ணியும் காதல் கொழுநனும் - பெரிய மலர்போலும் கண்ணினையுடையாளும் அவளாற் காதலிக்கப்படும் கொழுநனும்,

       குலவொழுக்கமாவன : 1"நெடுநுகத்துப் பகல்போல, நடுவு நின்ற நன்னெஞ்சினோர், வடுவஞ்சி வாய்மொழிந்து, தமவும் பிறவு மொப்ப நாடிக், கொள்வதூஉ மிகைகொளாது கொடுப்பதூஉங் குறைகொடாது" வாணிகஞ் செய்தல் முதலியன. செல்வர் என்றது இருவர் தந்தையையும். அருந்தவம் - ஈண்டுத் தலைப்படு தானத்தின் மேற்று. முடித்தோர் எய்தும் என ஒரு சொல் வருவிக்க. உத்தர குரு: - போக பூமி யாறனுள் ஒன்று. தலைப்படுதானம் இன்னதென்ப தனை,

       2"அறத்தி னாற்றிய வரும்பெரும் பொருளைப்
       புறத்துறைக் குற்றமூன் றறுத்தநற் றவர்க்குக்
       கொள்கெனப் பணிந்து குறையிரந் தவர்வயின்
       உள்ளமுவந் தீவ துத்தம தானம்"

என்பதனானும், போக பூமியின் இயல்பினை,

       3"பதினா றாட்டைக் குமரனுஞ் சிறந்த
       பன்னீ ராட்டைக் குமரியு மாகி
       ஒத்த மரபினு மொத்த வன்பினும்
       கற்பக நன்மரம் நற்பய னுதவ
       ஆகிய செய்தவத் தளவு மவ்வழிப்
       போகம் நுகர்வது போக பூமி"

என்பதனானும், போக பூமியின் வகையாறனையும்,

       4"ஆதியரி வஞ்சம் நல்லரி வஞ்சம்
       ஏமத வஞ்சம் இரண வஞ்சம்

  தேவ குருவம் உத்தர குருவமெனப்
       போக பூமி யறுவகைப் படுமே"

என்பதனானும் அறிக. கய - பெருமை ;

       5"தடவும் கயவும் நளியும் பெருமை"

       என்பது தொல்காப்பியம். கயமலர் - நீர்ப்பூ என்னலுமாம். இவர்கள் தோன்றிப் போகம் நுகர்தலால் புகார் உத்தர குருவை யொத்த தென்க. மாநகர்க்கண் அந்நகர் உத்தர குருவை யொக்கும்படி செல் வர்க்குத் தோன்றிய கண்ணியும் கொழுநனும் என்றுரைக்க.

1. பட்டினப். 206-210. 2.பிங்க. 3-வது, 3. பிங்க, 6-வது. 4. திவா, 12-வது, 5. தொல், சொல், 320.