2. மனையறம்படுத்த காதை




55





60
மாயிரும் பீலி மணிநிற மஞ்ஞைநின்
சாயற் கிடைந்து தண்கான் அடையவும்

அன்ன நன்னுதல் மென்னடைக் கழிந்து
நன்னீர்ப் பண்ணை நளிமலர்ச் செறியவும்
அளிய தாமே சிறுபசுங் கிளியே
குழலும் யாழும் அமிழ்துங் குழைத்தநின்
மழலைக் கிளவிக்கு வருந்தின வாகியும்

மடநடை மாதுநின் மலர்க்கையி னீங்காது
உடனுறைவு மரீஇ ஒருவா வாயின


53
உரை
61

       (மாயிரும் பீலி .... ஒருவாவாயின) மாயிரும் பீலி மணிநிற மஞ்ஞை நின் சாயற்கு இடைந்து தண்கான் அடை யவும் - கரிய பெரிய பீலியையுடைய நீல மணி போலும் நிறத்தையுடைய மயில்கள் நின் சாயற்குத் தோற்றுத் தண்ணிய காட்டிடத்தே போய் ஒடுங்காநிற்கவும், அன்னம் நன்னுதல் மென்னடைக்கு அழிந்து நன்னீர்ப் பண்ணை நளிமலர்ச் செறிய வும் - நல்ல நெற்றியை யுடையாய், அன்னங்கள் நின் மென்மை யுடைய நடைக்குத் தோற்று நல்ல நீரையுடைய வயல்களிற் செறிந்த மலரிடையே புக்கு மறையவும், அளிய தாமே சிறு பசுங்கிளியே - சிறிய பசிய கிளிகள் தாம் அளிக்கத்தக்கன ; குழலும் யாழும் அமிழ்தும் குழைத்த நின் மழலைக் கிளவிக்கு வருந்தினவாகியும் - அவை குழலினிசையையும் யாழினிசையையும் அமிழ்தத்தையும் கலந்து குழைத்தாலொத்த நினது முதிராத மழலைச் சொற்குத் தோற்றனவாகியும், மட நடை மாது நின் மலர்க் கையின் நீங்காது உடன் உறைவு மரீஇ ஒருவா வாயின - மடப்பத்தையுடைய நடையினையுடைய மாதே, நின்னை வழிபட்டு அச் சொல்லினைக் கற்கக் கருதி நினது மலர்போலுங் கையினின்றும் நீங்காவாய் நின்னுடனே வெறுப்புத் தோன்றாமல் உறைதலையும் பொருந்திப் பிரியாவாயின ஆகலான்.

       மாயிரு என யகர உடம்படு மெய் பெற்றது. 1"கிளந்தவல்ல" என்னும் புறனடையான் அமையும். மணி - நீல மணி. தண் கான் - இழிந்தகாடு. நளி - செறிவு. செறிதல் - ஒடுங்குதல், குழைத்த - குழைத்தா லொத்த ; இல்பொருளுவமம்; குழைவித்த எனினுமமையும் ; வருத்திய என்றபடி.

       நன்னுதல், மாது, மஞ்ஞை அடையவும் அன்னம் செறியவும், கிளி வருந்தினவாகியும் நீங்காது மரீஇ ஒருவாவாயின ; ஆகலின் அவை அளிக்கத்தக்கன ; என வினை முடிபு கொள்க.

1. தொல் எழு சூ. 483.