2. மனையறம்படுத்த காதை

மாசறு பொன்னே வலம்புரி முத்தே
காசறு விரையே கரும்பே தேனே


73
உரை
74

       மாசு அறு பொன்னே - கட்கு இனிமையாற் குற்ற மற்ற பொன்னை யொப்பாய், வலம்புரி முத்தே - ஊற்றின் இன் பத்தால் வலம்புரி யீன்ற முத்தை யொப்பாய், காசு அறு விரையே - உயிர்ப்பின் இனிமையாற் குற்றமற்ற விரையை யொப்பாய், கரும்பே - சுவையினிமையிற் கரும்பையொப்பாய், தேனே - இனிய மொழியையுடைமையால் தேனை யொப்பாய்,

       வலம்புரிமுத் தென்றதனால் மரபின் தூய்மையுங் கூறினான் : "1வலம்புரி முத்திற் குலம்புரி பிறப்பும்" என்பது காண்க. தேன் - யாழின் நரம்பிற்கு ஆகுபெய ரென்னலுமாம். "2நரம்பார்த்தன்ன இன்குரற் றொகுதி" என்றார் நக்கீரனாரும். ஒளியும் ஊறும் நாற்ற மும் சுவையும் ஓசையுமாகிய ஐம்புலனுங் கூறி நலம் பாராட்டினான் ;

"3கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனும் ஒண்டொடி கண்ணே யுள"

என்னும் வள்ளுவர் வாய்மொழியுங் காண்க.

1. ஆத்திரையன். பொதுப்பாயிரம். 2. திருமுரு, அடி-212. 3. குறள், அதி, 111 : 1.