2. மனையறம்படுத்த காதை



85





90
வாரொலி கூந்தலைப் பேரியற் கிழத்தி

மறப்பரும் கேண்மையோ டறப்பரி சாரமும்
விருந்து புறந்தரூஉம் பெருந்தண் வாழ்க்கையும்
வேறுபடு திருவின் வீறுபெறக் காண
உரிமைச் சுற்றமோ டொருதனி புணர்க்க
யாண்டுசில கழிந்தன இற்பெருங் கிழமையிற்

காண்டகு சிறப்பிற் கண்ணகி தனக்கென்.


84
உரை
90

       வார் ஒலி கூந்தற் பேரியற் கிழத்தி - நீண்ட தழைத்த கூந்தலையுடைய இருநிதிக் கிழவன் மனைக்கிழத்தி, மறப்பருங் கேண்மையோடு - மறத்தலரிய சுற்றந்தழாலோடே, அறப் பரிசாரமும் - அறநெறியாளரை ஓம்பலும், விருந்து புறந் தரூஉம் பெருந்தண் வாழ்க்கையும் - விருந்தினரைப் பேணுதலு மாகிய இவற்றுடன் கூடிய பெருமையுடைய இல்வாழ்க்கையை, வேறுபடுதிருவின் வீறுபெறக் காண - நானாவிதமான செல்வத் தோடே நடத்திக் கைவந்து உயர்ச்சி பெறுதலைக் காணவேண்டி, உரிமைச் சுற்றமோடு ஒரு தனி புணர்க்க - அடிமைத் திர ளோடே வேறாக இருக்கச் செய்ய, யாண்டு சில கழிந்தன இற் பெருங் கிழமையின் காண்தகு சிறப்பின் கண்ணகி தனக்கென் - காணத்தக்க சிறப்பினையுடைய கண்ணகிக்குப் பெருமையுடைய இல்லறத்தை நடத்தும் உரிமைப்பாட்டுடன் சில ஆண்டுகள் கழிந்தன.

       வாரொலி கூந்தல் - கண்ணகியை என்றுமாம். 'கூந்தலை யுடைய பேரியற்கிழத்தியெனினு மமையும்' என அடியார்க்கு நல் லார் கூறுதலின், 'கூந்தலைப் பேரியற் கிழத்தி' எனப் பிறர் பாடங் கொண்டமை பொருந்துவதன்று.

       'பேரிற் கிழத்தி' என்பதும், 'அறப்பரிகாரம்' என்பதும் அரும் பதவுரை யாசிரியர் கொண்ட பாடம். அறப்பரிகாரம் - துறந் தாரைப் பூசித்து அறத்தைப் பரிகரித்தல் என்பர். மறப்பரிய என்ற அடையைப் பிறவற்றோடுங் கூட்டுக. அறப்பரிகாரம் என்பதில் அறவோர்க் களித்தலும் அந்தணரோம்பலும் துறவோர்க்கெதிர்த லும் அடங்கும்; பின்,
1கொல்லைக்களக் காதையிற் கண்ணகி கூறுமாறு அறிக. புறந்தரூஉம் - புறந்தரலும் என்க; புறந்தரல் - பேணுதல். ஏனை மூன்று நிலையினரையும் வறியர் முதலானாரையும் வேண்டுவன தந்து புரக்கும் அன்பும் அருளுமுடைமையால் பெருந்தண் வாழ்க்கை யென்று பெயர் கூறினார். என், அசை.

       செல்வர்க்குத் தோன்றிய கண்ணியும் கொழுநனும் தென்றலைக் கண்டு மகிழ்ந்து சிறந்து ஏறிக் காட்சிபோலச் சேக்கையிலிருந்து எழுதி மயங்கிக் கையற்று முகநோக்கிக் கட்டுரை கூறுகின்றவன் பல பாராட்டி மகிழ்ந்து செல்வுழி ஒருநாள் பேரியற் கிழத்தி ஒரு தனி புணர்க்கக் கண்ணகிதனக்குப் பெருங் கிழமையோடு ஆண்டு சில கழிந்தன எனக் கூட்டுக.

       எல்லாவடியும் நேரடியால் வந்து முடிதலின், இது நிலைமண்டில வாசிரியப்பா.


1. சிலப் 16 : 71-2.