2. மனையறம்படுத்த காதை




40
குழவித் திங்கள் இமையவ ரேத்த
அழகொடு முடித்த அருமைத் தாயினும்

உரிதின் நின்னோ டுடன்பிறப் புண்மையிற்
பெரியோன் தருக திருநுத லாகென


38
உரை
41

       குழவித் திங்கள் இமையவர் ஏத்த அழகொடு முடித்த அருமைத்து ஆயினும்--பிறைமதியானது இமையவர் ஏத்தாநிற்க இறைவன் தன் முடிக்கு அழகு செய்தல் காரணத்தாற் சூடிய அருமை யுடையதாயினும், உரிதின் நின்னோடு உடன் பிறப்பு உண்மையின் பெரியோன் தருக திருநுதல் ஆகென - அது நின்னோடு உடன்பிறப்பாகலின் நினக்கு உரித் தாதலால் அப்பெரியோன் அதனை நினக்குத் திருநுதலாகத் தரக் கடவன் ;

       திங்கட் குழவியென்றது 1"சொல்லிய வல்ல பிற வவண் வரினும்" என்னும் மரபியற் புறனடையான் முடியுமென்பர் அடியார்க்கு நல்லார் ;

       2" பிள்ளை குழவி கன்றே போத்தெனக்
       கொள்ளவு மமையு மோரறி வுயிர்க்கே "

       என்னுஞ் சூத்திரத்து, ஓரறிவுயிர்க்குக் கொள்ளவும் அமையுமென்னும் உம்மையை எச்சப்படுத்துப் பிறவழியுங் கொள்ளப்படும் என முடிப்பர் பேராசிரியர். இமையவ ரேத்தல் 3"அப்பிறை பதினெண் கணனு மேத்தவும் படுமே " என்பதனானுமறிக. உரிது - உரித்து. பெரியோன் - மாதேவன்; இறைவன். திருநுதலாக வென்று தருக என்க. பிறை திருவொடு பாற்கடலிடைப் பிறத்தலின் இவளைத் திருமகளாக மதித்து இங்ஙனங் கூறினான்.

       [அடி. தருக வென்றது சூடின பிறை இரண்டு கலையாதலின், அதனை எண்ணாட்டிங்களாக்கித் தருகவென்பது கருத்து ; என்னை ? 4' மாக்கட னடுவண் எண்ணாட் பக்கத்துப், பசுவெண் டிங்கள் தோன்றி யாங்குக், கதுப்பயல் விளங்குஞ சிறுநுதல்' என்றாராகலின். இதனான் மேற்கூறுகின்ற கரும்பையும் வச்சிரத்தையும் அவ்வவ் வுறுப்புக்கட் கேற்பத் திருத்தி ஈக்க அளிக்க என்பதாயிற்று ; என்றது, கரும்பிற்கு நிறனும், வச்சிரத்திற்கு நேர்மையும் உண்டாக்கி யென்றவாறு.]

1. தொல் - பொருள், சூ.665. 2. தொல். பொருள், சூ. 579. 3. புறம் - கடவுள் வாழ்த்து. 4. குறுந். 129.