3. அரங்கேற்று காதை

பிண்டியும் பிணையலும் எழிற்கையுந் தொழிற்கையுங்

18
உரை
18

        பிண்டி - ஒன்று ; ஈண்டு ஒற்றைக் கைக்கு ஆகுபெயர். பிணையல் - இணைதல் ; ஈண்டு இரட்டைக்கை. பிண்டி, ஒற்றைக்கை, இணையா வினைக்கை என்பன ஒரு பொருளன; பிணையல், இணைக்கை, இரட்டைக்கை என்பன ஒரு பொருளன. அவி நயக்கை இங்ஙனம் இருவகைப்படும். பிண்டி - பொருட்கை யாம் ; பிணையல் - தொழிற்கையாம் என்க. அவற்றுள் ஒற் றைக்கை முப்பத்து மூன்று வகைப்படும். அவை : பதாகை--1, திரிபதாகை--2, கத்தரிகை--3, தூபம்--4, அராளம்--5, இளம்பிறை--6, சுகதுண்டம்--7, முட்டி--8, கடகம்--9, சூசி--10, கமல கோசிகம்--11, காங்கூலம்--12, கபித்தம்-- 13, விற்படி--14, குடங்கை--15, அலாபத்திரம்--16, பிர மரம்--17, தாம்பிர சூடம்--18, பசாசம்--19, முகுளம்--20, பிண்டி--21, தெரிநிலை--22, மெய்ந்நிலை--23, உன்னம்-- 24, மண்டலம்--25, சதுரம்--26, மான்றலை--27, சங்கு --28, வண்டு--29, இலதை--30, கபோதம்--31, மகர முகம்--32, வலம்புரி--33 என்பன. இவற்றுள்,

       பதாகையாவது நான்கு விரலும் தம்முள் ஒட்டி நிமிரப் பெரு விரல் குஞ்சித்து நிற்பது.

       திரிபதாகையாவது பதாகைக்கையின் அணிவிரல் முடக்குவது.


       கத்தரிகையாவது திரிபதாகையின் முடங்கிய அணிவிரற் புறத்த தாகிய நடுவிரலைச் சுட்டு விரலோடு பொருந்த நிமிர்ப்பது.

       தூபமாவது நிமிர்ந்த நடுவிரலும் சுட்டுவிரலும் பாதிப்பட வளைய நிற்பது.

       அராளமாவது பெருவிரல் குஞ்சித்துச் சுட்டுவிரன் முடக்கி ஒழிந்த விரன் மூன்றும் நிமிர்ந்து வளைவது.

       இளம்பிறையாவது சுட்டுவிரலும் நடுவிரலும் அணிவிரலையும் சிறுவிரலையும் ஒட்டி அகம் வளைய, வளைத்த பெருவிரல் அவற்றை விட்டு நீங்குவது ; "சுட்டும் பேடும் அநாமிகை சிறுவிரல், ஒட்டி யகம் வளைய வொசித்த பெருவிரல், விட்டு நீங்கும் விதியிற் றென்ப ."

       சுகதுண்டம்: "சுகதுண்ட மென்பது தொழில்பெறக் கிளப் பின், சுட்டு விரலும் பெருவிரல் தானும், ஒட்டி யுகிர்நுனை கவ்வி முன்வளைந், தநாமிகை முடங்கப் பேட்டொடு சிறுவிரல், தான்மிக நிமிர்ந்த தகுதித் தென்ப."

       அநாமிகை - அணிவிரல்; பவுத்திரவிரல். பேடு - நடுவிரல்.

       முட்டி : "முட்டி யென்பது மொழியுங் காலைச், சுட்டு நடுவிரல் அநாமிகை சிறுவிரல், இறுக முடக்கி யிவற்றின்மிசைப் பெருவிரல், முறுகப் பிடித்த முறைமைத் தென்ப."

       கடகம் : "கடக முகமே கருதுங் காலைப், பெருவிர னுனியுஞ் சுட்டுவிர னுனியு, மருவ வளைந்தவ் வுகிர் நுனி கௌவி, யொழிந்த மூன்றும் வழிவழி நிமிர, மொழிந்தன ரென்ப முடிபறிந் தோரே."

       சூசி ; "சூசி யென்பது துணியுங் காலை, நடுவிரல் பெருவிர லென்றிவை தம்மி, லடைவுட னொற்றிச் சுட்டுவிர னிமிர, வொழிந்தன

       வழிவழி முடங்கி நிற்ப, மொழிந்தனர் மாதோ முடிபறிந்தோரே."

       பதுமகோசிகம் : "பதும கோசிகம் பகருங் காலை, யொப்பக் கைவளைத் தைந்து விரலு, மெய்ப்பட வகன்ற விதியிற் றாகும்."

       காங்கூலமாவது : "காங்கூ லம்மே கருதுங் காலைச், சுட்டும் பேடும் பெருவிரன் மூன்று, மொட்டிமுன் குவிய வநாமிகை முடங்கிச், சிறுவிர னிமிர்ந்த செய்கைத் தாகும்," "முகிழ்காங் கூல முந்துற மொழிந்த, குவிகாங் கூலங் குவிவிழந் ததுவே," "மலர்காங் கூல மதுமலர்ந் ததுவே."


       கபித்தமாவது : சுட்டுவிரனுனியும் பெருவிரனுனியும் உகிர் நுனை கௌவிப்பிடித்த ஒழிந்த மூன்றுவிரலும் மெல்லெனப் பிடிப்பது.

       விற்பிடி : "விற்பிடி யென்பது விரிக்குங் காலைச், சுட்டொடு பேடி யநாமிகை சிறுவிர, லொட்டி யகப்பால் வளையப் பெருவிரல், விட்டு நிமிரும் விதியிற் றாகும்."

       குடங்கையாவது எல்லா விரலுங் கூட்டி உட்குழிப்பது.

       அலாபத்திரமாவது சிறுவிரன் முதலாகிய வைந்தும் வளைந்து மறிவது.

       பிரமரமாவது அநாமிகை விரலும் நடுவிரலும் தம்மிற் பொருந்தி வலஞ்சாயப் பெருவிரல் நடுவிரலி னுள்ளே சேரச் சுட்டு விரலும் சிறுவிரலும் பின்பே வளைந்து நிற்பது.

       தாம்பிரசூடமாவது நடுவிரலும் சுட்டுவிரலும் பெருவிரலும் தம்மில் நுனியொத்துக் கூடி வளைந்து சிறுவிரலும் அணிவிரலும் முடங்கி நிமிர்வது.

       பசாசமாவது பெருவிரலும் சுட்டுவிரலுமன்றி ஒழிந்த மூன்று விரலும் தம்மிற் பொலிந்து நிற்பதெனக்கொள்க.

       அப் பசாசந்தான் மூன்று வகைப்படும் :
       அகநிலைப்பசாசம்--சுட்டுவிர னுனியில் பெருவிர லகப்படுவது.
       முகநிலைப்பசாசம்--அவ்விரன் முகங்கூடி உகிர்விட்டு நிற்பது.
       உகிர்நிலைப்பசாசம்--சுட்டுவிரலும் பெருவிரலும் உகிர்நுனை
கௌவி நிற்பது.

       முகுளமாவது ஐந்துவிரலுந் தம்மில் தலைகுவிந்து உயர்ந்து நிற்பது.

       பிண்டியென்றது சுட்டுவிரல் பேடிவிரல் அநாமிகை சிறுவிரல் ஒட்டி நெகிழ முடங்க அவற்றின்மேலே குறுக்கிடம் பெருவிரல் கட்டி விலங்கி விரல்வழி முறையொற்றல்.

       தெரிநிலையாவது எல்லாவிரலும் விரிந்து குஞ்சித்து நிற்பது.

       மெய்ந்நிலையாவது சிறுவிரலும் அணிவிரலும் நடுவிரலும் சுட்டு விரலும் விட்டுநிமிரச் சுட்டுவிரன்மேற் பெருவிரல் சேரவைப்பது.


       உன்னமாவது சிறுவிரலும் பெருவிரலும் தம்முட்கூட ஒழிந்த மூன்று விரலும் விட்டுநிமிர்வது.

       மண்டலம் ; "மண்டலமென்பது மாசறக் கிளப்பிற், பேடு நுனியும் பெருவிர னுனியுங், கூடி வளைந்துதம் முகிர்நுனை கௌவி, யொழிந்த மூன்று மொக்க வளைவதென, மொழிந்தன ரென்ப முழு துணர்ந் தோரே."

       சதுரமாவது சுட்டு விரலும் நடுவிரலும் அணிவிரலும் தம்முட் சேர்ந்து இறைஞ்சப் பெருவிரல் அகம் வர வைத்துச் சிறுவிரல் பின்பே நிமிர்ந்து நிற்பது.

       மான்றலையாவது பெருவிரலுஞ் சிறுவிரலு மொழிந்த மூன்றுந் தம்மில் ஒத்து ஒன்றி முன்னே இறைஞ்சி நிற்பது.

       சங்கமாவது பெருவிரல் நிமிர ஒழிந்த நான்குவிரலும் வளைந்து நிற்பது.

       வண்டாவது பெருவிரலும் அணிவிரலும் வளைந்து நுனி யொன்றிச் சிறுவிரல் நிமிர்ந்து சுட்டு விரலும் நடுவிரலும் நெகிழ வளைந்து நிற்பது.

       இலதையாவது நடுவிரலும் சுட்டுவிரலும் கூடிநிமிரப் பெருவிரல் அவற்றின் கீழ்வரை சேர ஒழிந்த இரண்டு விரலும் வழிமுறை பின்னே நிமிர்ந்து நிற்பது.

       கபோதமென்றது பதாகைக் கையிற் பெருவிரல் விட்டுநிமிர்வது.

       மகரமுகமாவது பெருவிரலும் சுட்டுவிரலும் நிமிர்ந்துகூட ஒழிந்த மூன்றுவிரலுந் தம்முளொன்றி அதற்கு வேறாய் நிற்பது.

       வலம்புரியாவது சிறுவிரலும் பெருவிரலு நிமிர்ந்து சுட்டுவிரலின் அகம் வளைந்து ஒழிந்த விரண்டும் நிமிர்ந்து இறைஞ்சி நிற்பது.

       இனி, இரட்டைக்கை பதினைந்து வகைப்படும். அவை : அஞ்சலி --1, புட்பாஞ்சலி--2, பதுமாஞ்சலி--3, கபோதம்--4, கற் கடகம்--5, சுவத்திகம்--6, கடகாவருத்தம்--7, நிடதம்--8, தோரம்--9, உற்சங்கம்--10, புட்பபுடம்--11, மகரம்--12, சயந்தம் --13, அபயவத்தம்--14, வருத்தமானம்--15. இவற்றுள்,

       அஞ்சலியாவது : இரண்டு கையும் பதாகையாய் அகமொன்றுவது.

       புட்பாஞ்சலியாவது இரண்டு கையும் குடங்கையாய் வந்து ஒன்றுவது.

       கபோதமென்றது இரண்டு கையும் கபோதமாகக் கூட்டுவது.

       கற்கடக மென்றது தெரிநிலைக் கையிரண்டும் அங்குலி பிணைந்து வருவது.

       கவத்திக மென்றது மணிக்கட்டிற் பொருந்திய பதாகையிரண்டையும் மணிக்கட்டி லேற்றி வைப்பது.

       கடகா வருத்தமாவது இரண்டு கையும் கடகமாய் மணிக்கட்டுக்கு ஏற இயைந்து நிற்பது.

       நிடதமாவது முட்டியாக இரண்டு கையும் சமஞ்செய்வது.

       தோரமாவது இரண்டு கையும் பதாகையாக்கி அகம்புற மொன்றி முன்தாழ்ந்து நிற்பது.


       உற்சங்கமாவது ஒருகை பிறைக்கையாகக் கொண்டு ஒருகை
       அராளமாக்கி இரண்டு கையும் மணிக்கட்டி லேற்றி வைப்பது.

       புட்பபுடமாவது குடங்கையிரண்டும் தம்மிற் பக்கங் காட்டி நிற்பது.

       மகரமென்றது கபோத மிரண்டு கையும் அகம்புற மொன்ற வைப்பது.

       சயந்தம் : (விடுபட்டது)

       அபயவத்தமாவது இருகையும் சுகதுண்டமாக நெஞ்சுற நோக்கி நெகிழ்ந்து நிற்பது.

       வருத்தமானமாவது முகுளக் கையிற் கபோதக் கையை எதிரிட்டுச் சேர்ப்பது.

       எழிற்கை - அழகுபெறக் காட்டுங்கை. தொழிற்கை - தொழில் பெறக் காட்டுங் கை. பொருட்கை யென்பதும் வருவிக்கப்படும் ; ஆவது, பொருளுறக் காட்டுங்கை.