3. அரங்கேற்று காதை

20 கூடை செய்தகை வாரத்துக் களைதலும்
வாரஞ் செய்தகை கூடையிற் களைதலும்

20
உரை
21

        கூடை, வாரம் என்பன சில தாளவிகற்பங்களுக்கும், இசைப் பாட்டுக்களின் இயக்கங்களுக்கும், அவிநயக் கைகட்கும், பிற சிலவற்றிற்கும் பெயர் ; ஈண்டு அவிநயக் கைகளை யுணர்த்தி நின்றன.

       
கூடை - ஒற்றைக்கை ; இரட்டை யொற்றைக் கையாகிய குவித்த கையையும் இது குறிக்கும். வாரம் - இரட்டைக்கை. அகக்கூத்து நிகழுமிடத்து ஒற்றையிற் செய்த கைத்தொழில் இரட்டையிற் புகாமலும், இரட்டையிற் செய்த கைத்தொழில் ஒற்றையிற் புகாமலும் களைதல். இன்னும், தேசியிற் கைத்தொழில் மார்க்கத்துப் புகாமலும், மார்க்கத்துக் கைத்தொழில் தேசியிற் புகாமலும் களைதலென்றுமாம் ; ஒற்றையும், இரட்டையும் தேசிக்கூறாகலானும் இரட்டையும் இரட்டைக் கிரட்டையும் வடுகிற் கூறாகலானுமென்க.