3. அரங்கேற்று காதை

யாழுங் குழலுஞ் சீரும் மிடறுந்

26
உரை
26

        யாழ் - பேரியாழ், மகரயாழ், சகோடயாழ், செங்கோட்டி யாழ் என யாழ் நால்வகைப்படும். அவற்றுக்கு நரம்பு முறையே இருபத்தொன்றும், பத்தொன்பதும், பதினான்கும், ஏழும் ஆகும். என்னை?

       
"ஒன்று மிருபது மொன்பதும் பத்துடனே
       
நின்ற பதினான்கும் பின்னேழும்--குன்றாத
       
நால்வகை யாழிற்கு நன்னரம்பு சொன்முறையே
       
மேல்வகை நூலோர் விதி"

       
என்பவாகலின். ஓரேழ்மேற்பத்துடனே என்பது பாடமாயின் மகர யாழிற்கு நரம்பு பதினேழாகும். இந்நால்வகையன்றிச் சிறுபான்மையான் வரும் யாழ் பிறவு முள என்பர். யாழின் பிற விலக்கணங்கள் பின் கானல்வரி யுரையிற் கூறப்படும். யாழ்- யாழ்ப்பாடல் என்க.


       
குழல் - குழலின்பாடல் என்க. குழல் - வங்கியம் ; அது மூங்கில், சந்தனம், வெண்கலம், செங்காலி, கருங்காலி யென்னும் ஐந்தானும் இயற்றப்படும். இவற்றுள் மூங்கிலே முதன்மையானது ; அதுபற்றியே புல்லாங்குழல், வேய்ங்குழல், வங்கியம், வேணு என்னும் பெயர்கள் குழலுக்கு வழங்குவ வாயின. மூங்கில் உத்தமம், வெண்கலம் மத்திமம், ஏனைய அதமம் என்பர். இக்காலத்துக் கருங்காலி செங்காலி சந்தனம் இவற்றாற் கொள்ளப்படும் எனவும், இவை கொள்ளுமிடத்து, உயர்ந்த ஒத்த நிலத்திற் பெருக வளர்ந்து நாலு காற்றும் மயங்கின் நாத மில்லையாமாதலால், மயங்கா நிலத்திலே இளமையும் நெடும் பிராயமுமின்றி ஒரு புருடாயுப் புக்க பெரிய மரத்தை வெட்டி, ஒரு புருடாகாரமாகச் செய்து, அதனை நிழலிலே யிட்டு ஆற வைத்து, திருகுதல் பிளத்தல் போழ்ந்துபடுதல் இன்மையறிந்து, ஓர் யாண்டு சென்றபின் வங்கியம் செய்யப்படும் எனவும், இதன் நீளம் இருபது விரலளவும், சுற்று நாலரை விரலளவுமாம் எனவும், இது துளையிடுமிடத்து நெல்லரிசியில் ஒரு பாதி மரனிறுத்திக் கடைந்து வெண்கலத்தால் அணைசு பண்ணி இட முகத்தை யடைத்து வலமுகம் வெளியாக விடப்படும் எனவும், இதிலே தூபமுகத்தின் இரண்டு விரல்நீக்கி முதல்வாய்விட்டு, இம்முதல் வாய்க்கு ஏழங்குலம்விட்டு வளைவாயினும் இரண்டு நீக்கி நடுவினின்ற ஒன்பது விரலினும் எட்டுத் துளையிடப்படும் எனவும், துளைகளின் இடைப்பரப்பு ஒரு விரலகலம் கொள்ளப்படும் எனவும் கூறுவர். இதனை வாசிக்குமிடத்து, வளைவாய் சேர்ந்த துளையை முத்திரையென்று நீக்கி, முன்னின்ற ஏழு துளையினும் இடக்கையின் இடைமூன்றுவிரலும், வலக்கையின் பெருவிர லொழிந்த நான்கு விரலும் பற்றி வாசிக்கப்படும். இவ் வங்கியத்தின் ஏழு துளைகளிலும் சரிகமபதநி என்னும் ஏழெழுத்தினையும் மாத்திரைப்படுத்தித் தொழில் செய்ய இவற்றுள்ளே ஏழிசையும் பிறக்கும் ; இவை பிறந்து இவற்றுள்ளே பண்கள் பிறக்கும் ;

       
"சரிக மபதநியென் றேழெழுத்தாற் றானம்
       
வரிபரந்த கண்ணிணாய் வைத்துத்--தெரிவரிய
       
ஏழிசையுந் தோன்று மிவற்றுளே பண்பிறக்கும்
       
சூழ்முதலாஞ் சுத்தத் துளை"


என்பது காண்க.

       
சீர் - அகக் கூத்திற்கும் புறக்கூத்திற்கு முரிய இருவகைத் தாளக் கூறுபாடுகள்.

       
மிடறு - மிடற்றுப்பாடல். இதனைச் சாரீரவீணை யென்பர். புற்கலம் எனப்படும் உடம்பு ஐம்பூதங்களின் பரிணாமத்தால் ஆகுமுறைமை அடியார்க்கு நல்லாரால் விரித்துரைக்கப் பட்டுளது; அஃது ஈண்டைக்கு வேண்டப்படுவதின்று.

       
உடம்பினளவு தன்கையால் தொண்ணூற்றாறு அங்குலம் எனவும், அவற்றுள் மேலே நாற்பத்தேழரை யங்குலமும் கீழே நாற்பத்தேழரை யங்குலமும் விட்டு நடுநின்ற ஓரங்குலம் மூலாதாரம் எனவும், மூலாதாரந் தொடங்கி எழுத்தின் நாதம் ஆளத்தியாய்ப் பின் இசை யென்றும் பண்ணென்றும் பெயராம் எனவும், நெஞ்சும் மிடறும் நாக்கும் மூக்கும் அண்ணாக்கும் உதடும் பல்லும் தலையும் என்னும் பெருந்தானம் எட்டினும் எடுத்தல் படுத்தல் நலிதல் கம்பிதம் குடலம் ஒலி உருட்டு தாக்கு என்னுங் கிரியைக ளெட்டானும் பண்ணிப் படுத்தலாற் பண்ணென்று பெயராயிற்று எனவும் கூறுவர்.

       
ஆளத்தி யென்பது இக்காலத்து ஆலாபனம் என வழங்கப் பெறும். அது மகர ஒற்றுடன் கூடிய குற்றெழுத்தாலும், நெட்டெழுத்தாலும் தென்னா, தெனா, தென்னா தெனா என்னும் அசைகள் கூட்டியும் செய்யப்படும் எனவும், மற்றும், ம, ந, த என்னும் மூன்று ஒற்றுக்களுடன் கூடிய அ இ உ எ ஒ என்னுங் குற்றெழுத் தைந்தானும், ஆ ஈ ஊ ஏ ஓ என்னும் நெட்டெ.ழுத் தைந்தானும் செய்யப்படும் எனவும், இவ்வாளத்திதான் அச்சு, பாரணை யென்றும், காட்டாளத்தி, நிறவாளத்தி, பண்ணாளத்தி யென்றும் எழுத்து வேற்றுமை யாற் பெயரெய்தும் எனவும், பிறவாறும் கூறுப.