3. அரங்கேற்று காதை




40
இமிழ்கடல் வரைப்பில் தமிழகம் அறியத்
தமிழ்முழு தறிந்த தன்மைய னாகி
வேத்தியல் பொதுவியல் என்றிரு திறத்தின்
நாட்டிய நன்னூல் நன்கு கடைப்பிடித்து
இசையோன் வக்கிரித் திட்டதை யுணர்ந்தாங்கு
அசையா மரபி னதுபட வைத்து
மாற்றோர் செய்த வசைமொழி யறிந்து
நாத்தொலை வில்லா நன்னூற் புலவனும்

37
உரை
44

        இமிழ் கடல் வரைப்பில் தமிழகம் அறிய - ஒலிக்கின்ற கடல் சூழ்ந்த புவியின்கண்ணே தமிழ் நாட்டினர் அறிய, தமிழ் முழுது அறிந்த தன்மையன் ஆகி - முத்தமிழும் துறைபோகக் கற்றுணர்ந்த தன்மையை யுடையனாகி, வேத்தியல் பொதுவியல் என்று இரு திறத்தின் - வேத்திய லென்றும் பொதுவிய லென்றும் கூறப்படும் இரண்டு கூறுபாட்டினை யுடைய, நாட்டிய நன்னூல் நன்கு கடைப்பிடித்த - நாடக நூலை நன்றாகப் பற்றிக்கொண்டு, இசையோன் வக்கிரித் திட்டதை உணர்ந்து - இசைப் புலவன் ஆளத்தி வைத்த பண்ணீர் மையை அறிந்து, ஆங்கு - அறிந்த வண்ணம், அசையா மரபின் - தளராத முறைமையாலே, அது படவைத்து - அவன் தாளநிலையில் எய்த வைத்த நிறம் தன் கவியிலே தோன்ற வைக்க வல்லனாய், மாற்றோர் செய்த வசைமொழி அறிந்து நாத்தொலைவு இல்லா - முன்பகைவர் செய்த வசை மொழிகளை யறிந்து அவை தோற்றாதபடி வசை யில்லாத மொழிகளால் நாடகக்கவி செய்யவல்ல கெடாத நாவினையுடைய, நன்னூற் புலவனும் - நல்ல நூலை வல்ல புலவனும் ;