[தண்ணுமை யாசிரியன்
அமைதி]
ஆடல் பாடல் இசையே தமிழே - எல்லாக்
கூத்துக்களும் எல்லாப் பாட்டுக்களும் எல்லா இசைகளும் இயல் இசை நாடக மென்னும் மூவகைத்
தமிழ்களும், பண்ணே பாணி தூக்கே முடமே - எல்லாப் பண்களும் இருவகைத் தாளங்களும் எழுவகைத்
தூக்குக்களும் இவற்றின் குற்றங்களும், தேசிகம் - இயற்சொல், திரிசொல், திசைச்சொல்,
வடசொல் என்னும் நால்வகைச் சொல் வழக்குக்களும், என்றிவை ஆசின் உணர்ந்து - என்று
சொல்லப்பட்ட இவற்றை நுண்ணிதின் உணர்ந்து, கூடை நிலத்தைக் குறைவின்றி மிகுத்து
- ஓருருவை இரட்டிக்கிரட்டி சேர்த்த விடத்து நெகிழாதபடி நிரம்ப நிறுத்தவும், ஆங்கு
வார நிலத்தை வாங்குபு வாங்கி - அவ்விடத்துப் பெறும் இரட்டியைப் பாகவுருவானவழி நிற்குமானம்
நிறுத்திக் கழியுமானங் கழிக்கவும் வல்லனாய், வாங்கிய வாரத்து யாழும் குழுலும் ஏங்கிய
மிடறும் இசைவன கேட்ப - இப்படி நிகழ்ந்த உருக்களில் யாழ்ப் பாடலும் குழலின் பாடலும்
கண் டப் பாடலும் இசைந்து நடக்கின்றபடி கேட்போர் செவிக் கொள்ளுமாறு, கூர் உகிர்க்கரணம்
குறி அறிந்து சேர்த்தி - தண்ணுமையை விரலின் செய்கையாலே குறியறிந்து சேரவாசிக்க
வல்லனாய், ஆக்கலும் அடக்கலும் - மற்றைக் கருவி களின் குறையை நிரப்புதலும் மிகுதியை
அடக்குதலும், மீத் திறம் படாமை - ஆக்குமிடத்தும் அடக்குமிடத்தும் இசையில் இரந்திரந்
தோன்றாமற் செய்தலும், சித்திரக் கரணம் சிதை வின்று செலுத்தும் - இவ்வனைத்தும்
செய்யுமிடத்துக் கைத் தொழில் அழகு பெறச் செய்து காட்டலும் வல்லனாய, அத்தகு தண்ணுமை
அருந்தொழில் முதல்வனும் - அத்தன்மை யுடைய தண்ணுமைக் கருவியின் அரிய தொழிலையுடைய
ஆசிரியனும்;
தண்ணுமை
என்றது ஏனைத்தோற் கருவிகளையும் அடக்கி நின்றது. அவற்றை,
"பேரிகை
படகம் இடக்கை உடுக்கை
சீர்மிகு
மத்தளம் சல்லிகை கரடிகை
திமிலை
குடமுழாத் தக்கை கணப்பறை
தமருகம்
தண்ணுமை தாவில் தடாரி
அந்தரி
முழவொடு சந்திர வளையம்
மொந்தை
முரசே கண்விடு தூம்பு
நிசாளம்
துடுமை சிறுபறை அடக்கம்
மாசில்
தகுணிச்சம் விரலேறு பாகம்
தொக்க
உபாங்கம் துடிபெரும் பறையென
மிக்க
நூலோர் விரித்துரைத் தனரே"
என்னுஞ்
சூத்திரத் தாலறிக. இவை அகமுழவு, அகப்புற முழுவு, புறமுழவு, புறப்புற முழவு, பண்ணமை முழவு,
நாண் முழவு, காலை முழவு என எழுவகைப்படும் என்றும், முன் சொன்ன உத்தமமான மத்தளம்
சல்லிகை இடக்கை கரடிகை பேரிகை படகம் குடமுழா என்பன அகமுழவும், மத்திமமான தண்ணுமை
தக்கை தகுணிச்சம் முதலியன அகப்புறமுழவும், அதமக் கருவியான கணப்பறை முத லியன புறமுழவும்,
முன் கூறப்படாத நெய்தற் பறை முதலியன புறப்புற முழவும், முரசு நிசாளம் துடுமை திமிலை
யென்னும் வீரமுழவு நான்கும் பண்ணமை முழவும், நாழிகைப் பறையானது நாண்முழவும், துடி என்பது
காலை முழவும் ஆகுமென்றும் கூறுவர். அடிகள் தண்ணுமை யொன்றனையே விதந்தோதுதலின் அதுவே
ஏனைக் கருவிகட் கெல்லாம் முதலாமென்பது பெற்றாம்.
|