சொல்லிய
இயல்பின் - நூல்களிற் சொன்ன முறைமையாலே, சித்திர வஞ்சனை புல்லிய அறிந்து - சித்திரப்
புணர்ப்பும் வஞ்சனைப் புணர்ப்பும் என்னும் இரு கூற்றினையும் அறிந்து, புணர்ப்போன்
பண்பின் - புணர்க்கவல்ல பாடலாசிரியனை யொத்த அறிவினை யுடையனாகி, வர்த்தனை நான்கும்
மயல் அறப் பெய்து - ஆரோகண அவரோகணங்களில் விரல்களை விட்டுப் பிடிக்கும் வர்த்தனை
நான்கினாலும் நூற்று மூன்று பண்ணீர்மை களையும் தந்நிலை குலையாமற் காட்டவல்லனாய்,
ஆங்கு - அவ்விடத்து, ஏற்றிய குரல் இளி என்று இரு நரம்பின் - பதினாற் கோவையினிடத்துக்
குரல் நரம்பு இரட்டிக்கவரும் அரும் பாலையையும், இளி நரம்பு இரட்டிக்கவரும் மேற்செம்
பாலையையும், இவைபோல அல்லாத பாலைகளையும், ஒப்பக் கேட்கும் உணர்வினன் ஆகி - இசை
நூல் வழக்காலே இணை நரம்பு தொடுத்துப் பாடும் அறிவினையுமுடையனாய், பண் அமை முழவின்
கண்ணெறி அறிந்து - பண்ணுதலமைந்த முழவின் கண்ணெறியினை அறிந்து, தண்ணுமை முதல்வன்
தன்னொடும் பொருந்தி - தண்ணுமை முதல்வனோடும் பொருந்தி, வண்ணப் பட்டடை யாழ்மேல்
வைத்து ஆங்கு - நிறத் தினையுடைய இளியென்னும் நரம்பினை யாழ்மேல் வைத்து, இசையோன்
பாடிய இசையின் இயற்கை - அதன்வழியே இசைக்காரன் பாடிய பாட்டினியல்பை, வந்தது வளர்த்து
- பாடுகின்ற பண் வரவுகளுக்குச் சுரம் குறைவு படாமை நிறுத்தி, வருவது ஒற்றி - அந்தப்
பண்ணுக்கு அயல் விரவாமல் நோக்கி இன்புற இயக்கி - வண்ண முதலாகக் காட்டப்பட்ட
பாடலியல் வழக்கெல்லாம் சுவை பொருந்த நிரம்பக் காட்டி, இசை பட வைத்து - முற்கூறிய
முதலும் முறையும் முதலான பண்ணிலக்கணம் பதினொன்றினையும் நிரம்ப வைத்து, வார நிலத்தைக்
கேடின்று பார்த்து - வாரப்பாடலை அளவு நிரம்ப நிறுத்தவல்லனாய், ஆங்கு - பாடலிடத்து,
ஈரநிலத்தின் எழுத்து எழுத்தாக - சொன்னீர்மைகளின் எழுத்துக்கள் சிதையாமலே எழுத்தெழுத்தாக
இசைக்கும், வழுவின்று இசைக்கும் குழலோன்தானும் - இச்சொல்லப்பட்ட இயல்புகளை இலக்கணப்படி
வழுவாமல் வாசித்துக்காட்ட வல்ல குழலாசிரியனும்;
இசைக்கும்
என்பதை எழுத்தெழுத்தாக இசைக்கும் என்றும், சொல்லப்பட்ட யாவற்றையும் வழுவின்றிசைக்கும்
என்றும் பிரித்துக் கூட்டுக.
அறிந்து
மயலறப்பெய்து உணர்வினனாகி அறிந்து பொருந்தி வைத்து வளர்த்து ஒற்றி இயக்கி வைத்துப்
பாரத்து இசைக்குங் குழ லோன் என்க.
[யாழாசிரியன்
அமைதி]
இப்பகுதியின்
உரை நன்கு விளங்குதற் பொருட்டு இசையைப் பற்றிய சில கொள்கைகளை முதற்கண் விளக்குதும்;-
தமிழில்
இசை என்பது சுரம், இராகம் என்னும் இரு பொருளிலும் வழங்கும். இராகத்திற்கு இசையென்னும்
பெயரன்றிப் பண் என்ற பெயரும் உண்டு. வடமொழியில் சுருதியென்று சொல்லப் படுவது தமிழில்
அலகு என்றும், மாத்திரை யென்றும் வழங்கும். மற்றும், சுரம் என்பதற்கு நரம்பு என்ற
பெயரும், பண் என்பதற்கு யாழ் என்ற பெயரும் தமிழில் வழங்கும். ஏழிசைகட்கும் தமிழிலே
குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்பன பெயர்களாம். ஏழு சுரங்கட்கும்
வடமொழியிலே சட்சம், ரிடபம் காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிடாதம்
என்பன பெயர் களாம்.
தமிழில்
ஏழிசைகட்கும் இருபத்திரண்டு அலகுகள் கூறப்பட்டுள்ளன; அவை குரல் முதலியவற்றிற்கு முறையே
4, 4, 3, 2, 4, 3, 2 ஆகும்; இதனை,
"குரல்
துத்தம் நான்கு கிளைமூன் றிரண்டாம் குரையா உழையிளி நான்கு -- விரையா விளரியெனின்
மூன்றிரண்டு தாரமெனச் சொன்னார் களரிசேர் கண்ணுற் றவர்"
என்பதனானறிக.
வடமொழியிலும்
ஏழு சுரங்கட்கும் இருபத்திரண்டு சுருதிகளே கூறப்பட்டுள்ளன; அவை சட்சம் முதலியவற்றிற்கு
முறையே 4, 3, 2, 4, 4, 3, 2 ஆகும்.
இந்த
இசை அல்லது சுரங்களின் வரிசைக்குத் தமிழில் கோவை யென்றும் பெயருண்டு. இவ்வரிசை
யமைப்புக்கள் ஆயப்பாலை, சதுரப்பாலை, வட்டப்பாலை, திரிகோணப்பாலை என நால்வகைப்
படுகின்றன, இவற்றினின்றும் உண்டாவது இராகம் அல்லது பண் ஆகும்.
ஏழிசை
யெனப்படும் சுரங்கள் ஏழினையும் மாறுந் திறத்தினாலேயே பலவகைப் பண்கள் அல்லது இராகங்கள்
உண்டாகின்றன; ஆகலின் சுரங்களைப்பற்றிய செய்திகளை முதலில் நன்கு தெரிந்து கொள்ளுதல்
வேண்டும். குரல் முதலாய ஏழனுள், தாரத்தில் உழையும், உழையிற் குரலும், குரலில் இளியும்,
இளியில் துத்தமும், துத்தத்தில் விளரியும், விளரியிற் கைக்கிளையும் பிறக்கும்;
இவற்றுள் முதலிற் றோன்றியது தாரம்.
"தாரத்துட்
டோன்றும் உழையுழை யுட்டோன்றும்
கைக்கிளை
தோன்றும் பிறப்பு"
என்பது
காண்க. தாரத்துள் அதற் கைந்தாவதாகிய உழையும், உழையுள் அதற் கைந்தாவதாகிய குரலும்,
இம்முறையே ஏனையவும் தோன்றின வென்பது அறியற்பாலது. இவ்வேழிசைகளும் வட்டப்பாலை
முறையில் ஒர் இராசி மண்டலத்தின் பன்னிரண்டு இருக்கை களையும் இடமாகக் கொள்ளும்
என்பது பின்னர் ஆய்ச்சியர் குரவையுள் விளக்கப்படும்.
ஒர்
இராகம் அல்லது பண்ணினை உண்டாக்குதற் பொருட்டு முதலிலே தொடங்கப்பெறும் சுரம் குரல்
என்பதாகும். ஏழு சுரங்களில் எதனையும் குரலாக நிறுத்துதல் உண்டு; அஃதாவது குரலே குரலாகவும்,
துத்தம் குரலாகவும், கைக்கிளை குரலாகவும் இங்ஙனம் தொடங்கப் பெறும் என்பதாம்.
சுரங்களைக்
கொண்டு இசையை எழுப்புதற்குக் கருவியாகக் கொள்ளப்பட்ட எழுத்துக்கள் சரிகமபதநி என்னும்
ஏழுமாம். இவ்வெழுத்துக்கள் சட்சம் முதலிய பெயர்களின் முதலெழுத்துக்கள் என்று கொள்வது
பொருந்தாமையால், இவை குறியீடாக அமைத்துக் கொள்ளப் பெற்றனவாதல் வேண்டும். வடநூற்றுறைபோயசிலரும்
இங்ஙனம் கருதுவர்.
"ஆ
ஈ ஊ ஏ ஐ ஓ ஒள வெனும் இவ்வே ழெழுத்தும் ஏழிசைக் குரிய"
எனத்
திவாகரம் கூறுதலின், ஆ முதலிய நெட்டுயிர் ஏழனையும் கருவியாகக் கொண்டு பண்டைத் தமிழ்
மக்கள் இசை பாடினராதலும் வேண்டும்.
தமிழிலே
இராகங்கள் பண் எனவும், திறம் எனவும் இருவகைப் படும். "நிறைநரம் பிற்றே பண்ணென
லாகும்," "குறைநரம் பிற்றே திறமெனப் படுமே" என்னும் திவாகர நூற்பாக்களால் ஏழுநரம்பானும்
இயன்றது பண்ணாம் என்பதும், ஆறு ஐந்து நான்கு எனக் குறைந்த நரம்புகளான் இயன்றன திறமாம்
என்பதும் பெறப் படும். திறத்தை மூன்று வகைப்படுத்துப் பண்ணியற்றிறம், திறம், திறத்திறம்
என வழங்குதலு முண்டு. பண்ணும், திறமூன்றும் ஆகிய இந் நால்வகை இராகங்களையும் குறிக்கும்
வடமொழிப் பெயர்கள் சம்பூரணம், சாடவம், ஒளடவம், சதுர்த்தம் என்பன. இந்நான்கும்
தமிழில் பண், திறம் என இரண்டாகக் கூறப்படுதலோடு, யாவும் பண்ணென்றே கூறப்படுதலும்
உண்டு.
தமிழில்
ஐந்திணைக்குமுரிய பண்கள் குறிஞ்சியாழ், பாலையாழ், முல்லையாழ், தெய்தல்யாழ,மருதயாழ்
என்பன, இவற்றுள் நெய்தல் யாழுக்கு விளரி என்பதும் பெயர். இது திறனில் யாழ் எனப்
படுதலின், திறங்களுடைய ஏனை நான்குமே பெரும்பண்கள் எனப்
படும்;
"யாம யாழ்ப்பெயர் குறிஞ்சி யாழும், செவ்வழி யாழ்ப் பெயர் முல்லை யாழும், பாலை
யாழும் மருத யாழுமென, நால்வகை யாழும் நாற்பெரும் பண்ணே" என்பது திவாகரம்; இதிலிருந்து
குறிஞ்சி யாழுக்கு யாம யாழ் என்ற பெயரும், முல்லை யாழுக்குச் செவ்வழி யாழ் என்ற
பெயரும் உண்டென்பது புலனாம். இந் நாற் பெரும் பண்ணும் பிறக்குமாறு "தாரத் துழைதோன்றப்
பாலை யாழ் தண்குரல், ஒருமுழை தோன்றக் குறிஞ்சியாழ் - நேரே, இளிகுரலிற் றோன்ற
மருதயாழ் துத்தம், இளியிற் பிறக்கநெய்த லியாழ்" எனக்கூறப்பட்டுளது. இதில் நெய்தல்
யாழ் என்றது செவ்வழி யாதல் வேண்டும். எனவே தாரம் குரலாக உழை அதற்குக் கிளையாகத்
தோன்றுவது பாலையாழ் எனவும், உழைகுரலாகக் குரல் குரலாக இளி அதற்குக் கிளையாகத் தோன்றுவது
மருதயாழ் எனவும், இளி குரலாகத் துத்தம் அதற்குக் கிளையாகத் தோன்றுவது செவ்வழி யாழ்
எனவும் கூறப்படும் என்க. கிளையாவது நின்ற நரம்பினின்றும் தோன்றும் நரம்பு; நின்ற
நரம்பிற்கு ஐந்தாவது நரம்பு. இவ்வாறே நின்ற நரம்பிற்கு நான்காவது நட்பு நரம்பென்றும்,
மூன் றாவதும் ஆறாவதும் பகை நரம்பென்றும், இரண்டாவதும் ஏழாவதும் இணை நரம்பென்றும்
அறிக.
இனி.
முற்குறித்த நான்கு பண்களுள் பாலையாழிலிருந்து செம்பாலை, படுமலைப் பாலை, செவ்வழிப்
பாலை, அரும்பாலை, கோடிப்பாலை, விளரிப் பாலை, மேற்செம் பாலை என்னும் ஏழு பாலை
யிசைகள் பிறக்கும்; இவை பிறக்குமாறு மேல் இக் காதையுள்ளும், ஆய்ச்சியர் குரவையுள்ளும்
விளக்கமாம்.
இனி,
பாலை, குறிஞ்சி, மருதம், செவ்வழி யென்னும் நாற்பெரும்பண்களில் ஒவ்வொன்றும் அகநிலை,
புறநிலை, அருகியல், பெருகியல் என்னும் இன வேறு பாட்டால் நந்நான்கு ஆகப் பெரும்பண்கள்
பதினாறாகும். நாற்பெரும் பண்களுள்ளே பாலை யாழுக்கு ஐந்தும், குறிஞ்சி யாழுக்கு எட்டும்,
மருத யாழுக்கு நான்கும், செவ்வழி யாழுக்கு நான்கும் ஆக இருபத்தொரு திறங்கள் உள்ளன.
"ஈரிரு பண்ணும் எழுமூன்று திறனும்" எனபது பிங்கலம். திறம் இருபத் தொன்றும் அகநிலை,
புறநிலை, அருகியல், பெருகியல் என்னும் வேறு பாட்டால் எண்பத்து நான்கு ஆகும். எனவே,
பண் பதினாறும், திறம் எண்பத்து நான்கும் சேர்ந்து நூறு என்னும் தொகையினவாகின்றன.
பிங்கல நிகண்டிலே திறங்களின் வகை யாவற்றிற்கும் பெயர் கூறி முடித்த பின், "தாரப்
பண்டிறம் பையுள் காஞ்சி, படுமலை யிவை நூற்று மூன்று திறத்தன" என்று கூறப்பட்டிருத்தலின்,
தாரப் பண்டிறம், பையுள் காஞ்சி, படுமலை என்னும் மூன்று திறங்களும் முற்கூறிய நூற்றுடன்
சேரப் பண்கள் நூற்று மூன்று என்னும் தொகைபெறும். பண் நூற்றுமூன்றென்றல் பெரு வழக்கு.
பெரும் பண்களின் வகை பதினாறனுட் பன்னிரண்டுக்கும், திறங்களும், அவற்றின் வகையுமாகிய
எண்பத்து நான்கிற்கும் பெயர் பிங்கல நிகண்டிற் காண்க.
இனி,
தமிழிலே குரல் முதலாகவும், வடமொழியிலே சட்சம் முதலாகவும் ஏழுசுரங்களும் பெயர் கூறப்படுதலின்,
குரலும் சட்சமும் ஒன்றெனவும், துத்தமும் ரிடபமும் ஒன்றெனவும், இவ்வாறே ஏனையவும் முறையே
ஒவ்வொன்றாமெனவும் கருதுதல் கூடும். ஆயின், இவற்றுக்குக் கூறப்படும் அலகும் ஒலியும்
பிறப்பிடமும் வேறுபடுதலின், அம்முறையே இவ்விரண்டு ஒன்றெனல் அமையாமை பெற்றாம்.
ஈண்டு அலகினை நோக்குதும் :-
குரல்
- 4, துத்தம் - 4, கைக்கிளை - 3, உழை - 2, இளி - 4, விளரி - 3, தாரம் - 2.
சட்சம்
- 4, ரிடபம் - 3, காந்தாரம் - 2, மத்திமம் - 4, பஞ்சமம்
-
4, தைவதம் - 3, நிடாதம் - 2.
இவற்றுள்
இரண்டாவதும் மூன்றாவதும் நான்காவதும் மாத்திரையில் ஒவ்வாமை காண்க. சட்சம் முதலியவற்றிற்கு
இங்கே காட்டிய சுருதிகளின் அளவே சாரங்கதேவர் இயற்றிய சங்கீதரத்னாகரம் முதலிய
நூற்கள் பலவற்றிலும் காணப்படுதலின், அம்முறையே தமிழுக்கும் பொருத்தமாதல் வேண்டும்.
குரல் என்பதனைச் சட்சம் என்று கொள்ளாது மத்திமம் எனக் கொள்ளின் இரண்டிலும்
சுருதியளவுகள் ஒத்து விடுகின்றன.
குரல்
- 4, துத்தம் - 4, கைக்கிளை -3, உழை - 2, இளி - 4, விளரி - 3, தாரம் - 2.
ம
- 4, ப - 4, த - 3, நி - 2, ச - 4, ரி - 3, க - 2.
சுருக்கங்கருதி
மத்திமம் முதலிய பெயர்கள் ம முதலிய எழுத்துக்களாற் குறிக்கப்பட்டன. மேலே காட்டியவற்றில்
இரு திறத்தும் அலகு ஒத்திருத்தல் காண்க. இவ்வாற்றால் பண்டைத் தமிழ் இசை நூலோர்
வடநூன் முறையிலமைந்த மத்திமத்தை ஆரம்ப சுரமாகக் கொண்டன ரென்பது போதரும். எனவே,
தாரத்து உழை தோன்றும் என்ற முறைப்படி காந்தாரத்தில் நிடாதமும், நிடாதத்தில் மத்திமமும்,
மத்திமத்தில் சட்சமும், சட்சத்தில் பஞ்சமமும், பஞ்சமத்தில் ரிடபமும், ரிடபத்தில்
தைவதமும் பிறக்கும் எனக் கொள்ள வேண்டும். இவற்றை நன்கு நினைவில் வைத்துக் கொள்ளின்,
பின் கூறப்படும் இசையியல்புகள் பெரும்பாலும் மயக்கற விளங்கும். மிக நுட்பமான இசையியல்புகளை
அறிய விழைவோர் இசை நூற்களைக் கற்றும், இசைப்பயிற்சி செய்தும் அறிதல் வேண்டும்.
|