3. அரங்கேற்று காதை

75
கைக்கிளை யொழிந்த பாகமும் பொற்புடைத்
தளராத் தாரம் விளரிக்கு ஈத்துக்
கிளைவழிப் பட்டன ளாங்கே கிளையுந்

75
உரை
77

        ஒழிந்த பாகமும் பொற்புடைத் தளராத்தாரம் விளரிக்கு ஈத்துக் கிளைவழிப் பட்டனள் - தளராத அழகுடைய தார நரம்பில் ஒழிந்த ஓரலகையும் விளரிக்குத்தர அவ்விளரி துத்த நரம்பாயிற்று;

       
விளரிக்குத் துத்தம் அம்முறையே ஐந்தாவதாகலின் கிளை வழிப்பட்டனள் என்றார். கிளையும் - இளியும்; குரலுக்கு இளி ஐந்தாவதாகலின் அதனைக் கிளையென்னும் பெயராற் கூறினார்; அன்றி, இளி யென்பதே எழுதுவோராற் கிளையெனத் திரிபுற்ற தெனலுமாம். அரும்பத வுரையாசிரியர் சொற்களை எஞ்சா தெடுத்துப் பொருள்கூறி முடிக்குங் கடப்பாடுடையரல்லர்; மற்று, அடியார்க்கு நல்லாரே அங்ஙனம் உரைக்குங் கடப்பாட்டினர். ஆயின், அவர் எக்காரணத்தானோ இசைப்பகுதியில் முன்னவருரைத்தவற்றையே தாமும் உரைத்து, மூலத்திலுள்ள சொற்கள் பலவற்றிற்குப் பொருளும் முடிபும் தெரிக்காது போயினர். அதனால், இஞ்ஞான்று அவற்றின் பொருள் அறிதல் அரிதாயினமையின் எழுதுவோராலும், பதிப்பிப்போராலும் வழுக்கள் நிகழ்தல் இயல்பேயாகும்.

       
அரும்பதவுரையிலும், அடியார்க்கு நல்லாருரையிலும் முறையே 'இக்கிரமத்தினாலே,' 'இளிக் கிரமத்தாலே' (சிலப். அரங். அடி. 63-4) எனவும், 'பதினாற்கோவை பொலிந்து,' 'பதினாற்கோவை கோலினிது' (ஷை அடி. 70) எனவும் 'வரப்பட்ட பாலை,' 'வட்டப் பாலை' (ஷை அடி. 72 - 3) எனவும் இங்ஙனம் எண்ணிறந்தன திரிந்து, திருத்தம் பெறாமலே முந்திய பதிப்புக்கள் பலவற்றிலும் காணப்படுதலை நோக்கின் மூலபாடம் உருச்சிதைந்து வழுப்பட்டிருத்தல் அரிதன் றென்பது புலனாம்.