அரங்கின் அமைதி]
(எண்ணிய......அரங்கத்து)
எண்ணிய நூலோர் இயல்பினின் வழாது மண்ணகம் ஒருவழி வகுத்தனர்கொண்டு - எண்ணப்பட்ட
சிற்ப நூலாசிரியர் வகுத்த இயல்புகளின் வழுவாத வகை அரங்கியற்றுதற்குக் குற்றம் நீங்கின
ஓரிடத் திலே நிலம் வகுத்துக்கொண்டு, புண்ணிய நெடுவரைப் போகிய நெடுங்கழை கண்ணிடை
ஒருசாண் வளர்ந்தது கொண்டு - பொதியின் முதலாய திப்பிய மலைப்பக்கங்களிலே நீண்டு
வளர்ந்த மூங்கிலிற் கண்ணொடு கண்ணிடை ஒரு சாணாக வளர்ந்தது கொண்டு, நூல்நெறி மரபின் - நூல்களிற் கூறப்படும் முறையாலே, அரங்கம் அளக்கும் கோல் அளவு இருபத்து நால் விரல்ஆக
- அரங்கம் இயற்றுதற்கு அளக்குங்கோல் உத்தமன் கைப் பெருவிரல் இருபத்து நான்கு கொண்ட
அளவினதாக நறுக்கி, எழுகோல் அகலத்து எண்கோல் நீளத்து ஒருகோல் உயரத்து உறுப்பினதாகி
- அக்கோலால் எழுகோல் அகலமும் எண் கோல் நீளமும் ஒருகோற் குறட்டுயரமும் உடையதாய்,
உத்தரப் பலகையோடு அரங்கின் பலகை வைத்த இடைநிலம் நாற் கோல் ஆக - தூணின்மீது
வைத்த உத்தரப் பலகைக்கும் அரங்கின் தளத்திற்கிட்ட பலகைக்கும் இடைநின்ற நிலம்
நான்கு கோலளவினதாகவும், ஏற்ற வாயில் இரண்டு உடன்பொலிய - அவ்வளவுகட்குப் பொருந்த
வகுக்கப்பட்ட வாயில் இரண்டு விளங்கவும், தோற்றிய அரங்கில் - செய்யப்பட்ட அரங்கிலே,
தொழுதனர் ஏத்தப் பூதரை எழுதி மேல்நிலை வைத்து - நால் வகை வருணப் பூதரையும் எழுதி
யாவரும் புகழ்ந்து வணங்க மேனிலத்தே வைத்து, தூண்நிழற் புறப்பட மாண் விளக்கு எடுத்து
ஆங்கு - தூண்களின் நிழல் நாயகப் பத்தியின்கண்ணும் அவையின்கண்ணும் படாதபடி மாட்சிமைப்பட்ட
நிலைவிளக்கு நிறுத்தி, ஒருமுக எழினியும் பொருமுக எழினியும் கரந்துவரல் எழினியும் புரிந்து
உடன்வகுத்து ஆங்கு - இடத்தூண் நிலை யிடத்தே உருவு திரையாக ஒருமுக வெழினியும் இரண்டுவலத்
தூணிடத்தும் உருவு திரைவாகப் பொருமுக வெழினியும் மேற் கட்டுத் திரையாகக் கரந்துவர
லெழினியும் தொழிற்பாட்டுடனே வகுத்து, ஓவிய விதானத்து - சித்திர விதானத்தையும்
அமைத்து, உரைபெறு நித்திலத்து மாலைத் தாமம் வளைவுடன் நாற்றி - புகழமைந்த முத்துமாலைகளாற்
சரியும் தூக்கும் தாம முமாகத் தொங்கவிட்டு, விருந்துபடக் கிடந்த அருந்தொழில்
அரங்கத்து
- புதுமை யுடைத்தாகப் பொருந்திய அரியதொழிலை யுடைய அரங்கின்கண்;
|