[தலைக்கோல் அமைதி]
(பேரிசை மன்னர் ... வைத்தாங்கு)
பேர்இசை மன்னர் பெயர்புறத்து எடுத்த - பெரிய புகழையுடைய பகையரசர் போர்செய்து புறங்கொடுத்தவழிப்
பறிக்கப்பட்ட, சீர் இயல் வெண் குடைக் காம்பு நனி கொண்டு - அழகு பொருந்திய வெண்கொற்றக்
குடையின் காம்பை நன்கு எடுத்து கண்இடை நவமணி ஒழுக்கி மண்ணிய - கணுக்கள் தோறும்
கழுவிய நவ மணிகளாற் கட்டி, நாவல்அம் பொலம் தகட்டு இடைநிலம் போக்கி - சாம்பூநதம்
என்னும் பொன்னின் தகட்டாலே கணுக் கட்கு நடுவாகிய இடங்களைக் கட்டி, காவல் வெண்குடை
மன்னவன் கோயில் - உலகினைப் புரக்கும் வெண்குடையையுடைய அரசன் கோயிலில், இந்திர
சிறுவன் சயந்தன் ஆகென - தேவேந்திரன் மகன் சயந்தனாக நினைத்து, வந்தனை செய்து
வழி படு தலைக்கோல் - மந்திர விதியாலே பூசித்து வழிபட்டுக் காப்பமைத்து இருத்திய
தலைக்கோலை, புண்ணிய நன்னீர் பொற் குடத்து ஏந்தி மண்ணிய பின்னர் மாலை அணிந்து
- முன்கூறிப் போந்த ஆடலாசிரியன் முதலாயினோர் புண்ணிய நதிகளின் நல்ல நீரைப்
பொற் குடத்திலே முகந்து வந்து நீராட்டிய பின்பு மாலைகளுஞ் சூட்டி, நலம் தரு நாளால்
- இதற்குப் பொருந்திய நல்ல நாளிலே, பொலம் பூண் ஓடை அரசு உவாத் தடக்கையில் பரசினர்
கொண்டு - பொன்னாலாகிய பூணினையும் பட்டத்தினையு முடைய பட்ட வருத்தனத்தின் பெரிய
கையில் வாழ்த்துடன் கொடுத்து அதனை உடன்கொண்டு, முரசு எழுந்து இயம்ப - மும்முரசும்
எழுந்து முழங்கவும், பல் இயம் ஆர்ப்ப - அவை யன்றிப் பல வாச்சியங்களும் ஒலிக்கவும்,
அரசொடு பட்ட ஐம் பெருங் குழுவும் - அரசனும் அமைச்சர் புரோகிதர் சேனாபதியர் தூதுவர்
சாரணர் என்னும் ஐம்பெருங் குழுவினரும் உடன்வர, தேர் வலம் செய்து கவி கைக்கொடுப்ப
- வீதியின் கண் நின்ற தேருடன் வலஞ்செய்து தேர்மிசை நின்ற பாடுவோன் கையிலே இத்
தலைக்கோலைக் கொடுத்து, ஊர்வலஞ் செய்து புகுந்து முன் வைத்தாங்கு - நகரியை வலமாகவந்து
அரங்கின் கட்புகுந்து தலைக்கோலை எதிர்முகமாக வைத்தபின் ;
|