(இயல்பினின்......காட்டின
ளாதலின்) இயல்பினின் வழாஅ இருக்கை முறைமையின் - அரசன் முதலிய யாவரும் தகுதிக்
கேற்ற இருக்கைகளில் முறையே இருந்தபின், குயிலுவ மாக்கள் நெறிப்பட நிற்ப - இடக்கை
முதலிய குயிலுவக் கருவியாளர் தாம் நிற்க வேண்டிய முறைப்படி நிற்க, வலக்கால் முன்
மிதித்து ஏறி அரங்கத்து - அரங்கேறும் நாடகக் கணிகையாகிய மாதவி அரங்கிலே வலக்காலை
முன்வைத்து ஏறி, வலத் தூண் சேர்தல் வழக்கு எனப் பொருந்தி - பொருமுக வெழினிக்கு
நிலையிடனான வலப்பக்கத் தூணைச் சேர்தல் முறை யென்று அவ்விடத்தைச் சேர்ந்து, இந்நெறி
வகையால் இடத் தூண் சேர்ந்த தொல்நெறி இயற்கைத் தோரிய மகளிரும் - மாதவி வந்தேறி
நின்றவாறே ஒருமுக வெழினிக்கு நிலையிடனான இடப்பக்கத் தூணினைச் சேர்ந்து நின்ற பழைய
நெறியியற் கையை யுடைய தோரிய மடந்தையரும் தானும், சீர்இயல் பொலிய நீர் அல நீங்க
- நன்மை மிகவும் தீமை நீங்கவும் வேண்டி, வாரம் இரண்டும் வரிசையிற் பாட-ஓரொற்று
வாரம் ஈரொற்று வாரம் என்னும் தெய்வப் பாடல் இரண்டினையும் முறையாலே பாட, பாடிய
வாரத்து ஈற்றில் நின்று இசைக்கும்
கூடிய குயிலுவக் கருவிகள் எல்லாம்
- பாடிய தெய்வப் பாடலின் இறுதியிலே நின்று கூடி இசையா நிற்கும் கருவிகளெல்லாம்,
குழல் வழி நின்றது யாழே - வங்கியத்தின் வழி யாழ்ப் பாடல் நின்றதாக, யாழ்வழித்
தண்ணுமை நின்றது தகவே - யாழ்ப் பாடலின் வழியே மத்தளம் தகவுற நின்றதாக, தண்ணுமைப்
பின்வழி நின்றது முழவே - மத்தளத்தின் வழியே குடமுழா நின்றதாக, முழவொடு கூடிநின்று
இசைத்தது ஆமந்திரிகை - முழவுடன் கூடிநின்று வாச்சியக் கூறுகளை அமைத்தது இடக்கையின்
ஓசையாக, ஆமந்திரிகையோடு அந்தரம் இன்றி - இடக்கையோடு முன் சொன்ன குயிலுவக் கருவிகள்
அனைத்தும் பருந்தும் நிழலும்போல ஒன்றாய் நிற்ப, கொட்டு இரண்டு உடையது ஓர் மண்டிலம்
ஆக - ஒரு தாளத்திற்கு இரண்டு பற்றாக, கட்டிய மண்டிலம் பதினொன்று போக்கி - பஞ்சதாளப்
பிரபந்தமாகப் கட்டப்பட்ட தேசி யொத்தை ஒரு தாளத்திற்கு இரண்டு பற்றாகப் பத்தும்
தீர்வு ஒன்றுமாகப் பதினொரு பற்றாலே தேசிக் கூத்தை ஆடிமுடித்து, வந்த முறையின் வழிமுறை
வழாமல் - இப்படிச் செய்கை நாடக நூல்களில் அமைந்த முறையாகலான் அம்முறை வழுவாமல்,
அந்தரக் கொட்டு உடன் அடங்கிய பின்னர் - அந்தரக்கொட்டு என்றும் முகம் என்றும்
கூறப்படும் இவ்வொத்து ஆடிமுடிந்த பின்னர், மீத்திறம் படாமை வக்காணம் பகுத்துப் பாற்பட
நின்ற பாலைப் பண்மேல் - மங்கலப் பண்ணாய் நரப்படையவும் உடைத்தா யிருக்கின்ற
பாலைப்பண்ணை அளவு கோடாதபடி ஆளத்தியிலே வைத்து அதன்மேலே, நான்கின் ஒரீஇய நன்கனம்
அறிந்து - மங்கலச் சொல்லினை யுடைத்தாய் நாலுறுப்பும் குறைபாடில்லாத உருவுக்குச் சொற்படுத்தியும்
இசைப்படுத்தியும் அறிந்து பாட்டும் கொட்டும் கூத்தும் நிகழ்த்தி, மூன்று அளந்து ஒன்று
கொட்டி அதனை - மூன்றொத்துடைய மட்டத்திலே எடுத்து ஓரொத்துடைய ஏக தாளத்திலே முடித்து,
ஐது மண்டிலத்தால் - அழகிய மண்டில நிலையாலே, கூடை போக்கி - தேசிக்கு ஒற்றித் தொத்தலும்
இரட்டித் தொத்தலுமே யாகலின் தேசிக் கூறெல்லாம் ஆடி முடித்து.
(இனி
மார்க்கங் கூறுகின்றது.)
ஆறும் நாலும் அம்முறை போக்கி -
பஞ்சதாளப் பிரபந்தமாகக் கட்டப்பட்ட வடுகிலொத்தையும் தேசியிலொத்தைக் காட்டினாற்
போல இரட்டிக் கிரட்டியாக ஆடி, கூறிய ஐந்தின் கொள்கை போலப் பின்னையும் அம்முறை
பேரிய பின்றை - முன் சொல்லிப் போந்த தேசியைப்போல வடுகும் மட்டத்தாளம் முதலாக
ஏகதாளம் அந்தமாக வைசாக நிலையிலே ஆடி முடித்த பின்னர், பொன் இயல் பூங்கொடி புரிந்து
உடன் வகுத்தென - பொன்னால் இயன்றதோர் பூங்கொடியானது கூத்து நடித்தாற்போல, நாட்டிய
நன்னூல் நன்கு கடைப்பிடித்துக் காட்டினள் ஆதலின் - தாண்டவம் நிருத்தம் ]
நாட்டியம் என்னும் மூன்று கூறுபாட்டினும்
நாட்டியமென்னும் புற நடத்தை நூல்களிற் சொன்ன முறைமை தவறாமல் அவிநயித்துப் பாவகந்
தோன்ற விலக்குறுப்புப் பதினான்கின் நெறிவழுவாமல் ஆடிக்காட்டினள் ஆதலால்;
'இக்காதையிற் கூறிய முத்தமிழ் வகையும்
காட்டினளாதலின் என்றுமாம்' என்பர் தொல்லை யுரை யாசிரியர் இருவரும்.
|