3. அரங்கேற்று காதை




140


பாடிய வாரத்து ஈற்றின்நின் றிசைக்குங்
கூடிய குயிலுவக் கருவிக ளெல்லாங்
குழல்வழி நின்றது யாழே யாழ்வழித்
தண்ணுமை நின்றது தகவே தண்ணுமைப்
பின்வழி நின்றது முழவே முழவொடு
கூடிநின் றிசைத்த தாமந் திரிகை
ஆமந் திரிகையோ டந்தர மின்றிக்

137
உரை
143

       நின்றது நின்றது நின்றது நின்றிசைத்தது என்பவற்றுடன் ஆக என்னும் சொற் கூட்டி எச்சப்படுத்து, ஆமந்திரிகை இசைத்ததாக, இங்ஙனம் வாரத்து ஈற்றிலே நின்று கூடி யிசையாநிற்கும் குயிலுவக் கருவிகளெல்லாம் அந்தர மின்றி ஒன்றாய் நிற்ப எனச் சொன் முடிபு கொள்க. ஆமந்திரிகை - இடக்கை யென்னும் வாச்சியம். வாரப் பாடல் பாடிய பின் என்றமையால் மிடற்றுப் பாடலும் கூறியவாறாயிற்று. யாழ் குழல்வழி நின்றாற்போல மிடற்றுப்பாடலின் வழியும் நின்றதென்க.