3. அரங்கேற்று காதை

ஆடலும் பாடலும் பாணியுந் தூக்குங்

16
உரை
16

        ஆடல் - முற்கூறிய அகக்கூத்தினும் புறக்கூத்தினுமுள்ள ஆடல். கீற்று, கடிசரி முதலாகிய தேசிக்குரிய கால்கள் இரு பத்து நான்கும், சுற்றுதல், எறிதல் முதலாகிய வடுகிற்குரிய கால்கள் பதினான்கும், உடற்றூக்கு முதலாகிய உடலவர்த்

        தனை ஒன்பதும் அகக்கூத்துக் குரியன. "சிங்களம் இருவகை நிலையினும் எய்தும்" என்பாரும், உடலவர்த்தனையைச் சிங்கள மென்பாருமுளர். எனவே, தமிழ், வடுகு, சிங்களம் என ஆடல் மூவகைப்படும் என்க.

        பாடல் - இன்பம், தெளிவு, நிறை, ஒளி, வன்சொல், இறுதி, மந்தம், உச்சம் என்னும் எண்வகைப் பயனுமுடைய பாடல் .

        பாணி - தாளம் ; அது கொட்டு, அசை, தூக்கு, அளவு என நான்கு நிலையினையுடையது ; கொட்டாது அமுக்குதல்; அசையாவது தாக்கி யெழுதல் ; தூக்காவது தாக்கித் தூக்குதல் ; அளவாவது தாக்கின வோசை நேரே மூன்று மாத்திரை பெறுமளவும் வருதல். கொட்டு அரை மாத்திரை ; அதற்கு வடிவு, க ; அசை ஒரு மாத்திரை ; அதற்கு வடிவு, எ ; தூக்கு இரண்டு மாத்திரை ; அதற்கு வடிவு, உ ; அளவு மூன்று மாத் திரை ; அதற்கு வடிவு, ஃ எனக் கொள்க. கொட்டு முதலிய வற்றின் வடிவைக் குறிக்க, 'க' முதலிய இடுகுறியாக நிறுத்தப் பெற்றன வென்க;

                "கொட்டும் அசையுந் தூக்கும் அளவும்
       
       ஒட்டப் புணர்ப்பது பாணி யாகும்"

               "ககரங் கொட்டே எகரம் அசையே
                உகரந் தூக்கே அளவே யாய்தம்"


என்பன காண்க.

       
அரை மாத்திரையுடைய ஏகதாளம் முதலாகப் பதினாறு மாத் திரையுடைய பார்வதி லோசனம் ஈறாகச் சொன்ன நாற்பத்தொரு தாளம் புறக்கூத்துக்குரிய வெனவும், ஆறன் மட்டம் என்பனவும், எட்டன் மட்டம் என்பனவும், தாளவொரியல் என்பனவும், தனிநிலை யொரியல் என்பனவும், ஒன்றன் பாணி முதலாக எண்கூத்துப் பாணி யீறாகக் கிடந்த பதினொரு பாணி விகற்பங்களும், முதல்நடை, வாரம் முதலாயினவும் அகக்கூத்திற்குரிய வெனவும் கூறுவர்.

       
தூக்கு - இத்தாளங்களின் வழிவரும் எழுவகைப்பட்ட தூக்குக்கள் ; அவை செந்தூக்கு, மதலைத் தூக்கு, துணிபுத் தூக்கு, கோயிற்றூக்கு, நிவப்புத் தூக்கு, கழாற்றூக்கு, நெடுந் தூக்கு என்பன ; என்னை "ஒருசீர் செந்தூக் கிருசீர் மதலை, முச்சீர் துணிபு நாற்சீர் கோயில், ஐஞ்சீர் நிவப்பே யறு சீர் கழாலே, எழுசீர் நெடுந்தூக் கென்மனார் புலவர்" என்றா ராகலின்.