(அன்ன மென்னடை
......... கணமலர் விழிப்ப)
அன்னம்; மெல்நடை - அன்னமாகிய மென்மையுடைய
நடை யினையும,் ஆம்பல் நாறும் -ஆம்பலின் மணம் நாறும், தேம் பொதி நறுவிரைத் தாமரைச்
செவ்வாய் - தேன்மிக்க நறு மணத்தையுடைய தாமரையாகிய சிவந்த வாயினையும், தண் அறற்
கூந்தல் - தண்ணிய அறலாகிய கூந்தலினையும் உடைய, நன்னீர்ப் பொய்கை - நல்ல நீரையுடைய
பொய்கையாகிய மடவாள், பாண் வாய் வண்டு நேர்திறம் பாட - பாண்டன்மை யைத் தம்மிடத்தேயுடைய
வண்டுகளாகிய பள்ளியுணர்த்துவார் புறநீர்மை யென்னும் பண்ணாற் பள்ளியெழுச்சி பாட,
காண் வரு குவளைக் கண்மலர் விழிப்ப - அழகுபொருந்திய குவளை யாகிய கண்மலர் விழிப்ப,
ஆம்பல் நாறும் செவ்வாய் என இயையும்.
நடையினையும் வாயினையும் கூந்தலினையுமுடைய பொய்கையாகிய பெண் கண் விழிப்ப வென்க.
பாண் -பாண் சாதி, நேர்திறம் - புறநீர்மை எனவும் பெயர்பெறும். அது, பாலைப்பண்ணின்
திறம் ஐந்தனுள் ஒன்றென்க ; என்னை?
''தக்கராக நேர்திறங் காந்தார பஞ்சமமே
துக்கங் கழிசோம ராகமே -- மிக்கதிறற்
காந்தார மென்றைந்தும் பாலைத் திறமென்றார்
பூந்தா ரகத்தியனார் போந்து''
என்பவாகலின். நேர்திறம் என்னின்,
அது முல்லைப்பண்ணின் திறங் களி லொன்றாம், பாட, காரணப்பொருட்டு ; உடனிகழ்ச்சியுமாம்.
இனி, ஆம்பல் என்னும் பண் தோற்றும் வாய் என்றும், பாட்டினை யுடைய வாயையுடைய வண்டு
என்றும் கூறுதலுமாம். தேம் - இனிமை, தேன். குவளைக் கண்மலர் - குவளையாகிய கள்ளையுடைய
மலர், குவளையாகிய கண்மலர். விழிப்ப - மலர, கண்விழிக்க, இஃது உருவக வணி.
|