4. அந்திமாலைச் சிறப்புச்செய் காதை

              வெண்பா

கூடினார்பால் நிழல் ஆய், கூடார்பால் வெய்யது ஆய்,
காவலன் வெண்குடை போல் காட்டிற்றே - கூடிய
மாதவிக்கும், கண்ணகிக்கும், வான் ஊர் மதி விரிந்து
போது அவிழ்க்கும் கங்குல் - பொழுது.



1
உரை
4

                                   
                    ''கூடினார்......கங்குற் பொழுது''

       கூடினார்பால் நிழலாய் நட்பாய்ச் சேர்ந்தவர்பால் நிழலாகியும், கூடார்பால் வெய்யதாய் - பகையாய்ச் சேராதவர்பால் வெய்ய தாகியுமுள்ள, காவலன் வெண்குடைபோல் - சோழ மன்ன னுடைய வெண்கொற்றக் குடையைப்போல், போது அவிழ்க்கும் கங்குற்பொழுது - பூக்கள் இதழ்களை விரிக்கும் இராப் பொழுதில், வான் ஊர் மதி விரிந்து - வானிலே ஒளிவிரிந்து செல்லும் திங்கள், கூடிய மாதவிக்கும் கண்ணகிக்கும் - கோவலனைக் கூடிய மாதவிக்கும் அவனைப் பிரிந்த கண்ணகிக்கும், காட்டிற்று - முறையே தண்ணிதாயும் வெவ்விதாயும் தன்னைக் காட்டிற்று.

       உவமைக்கண், கூடினார், கூடார் என்பன முறையே நண்பர், பகைவர் என்னும் பொருளன. கூடிய மாதவி யென்றமையால், பிரிந்த கண்ணகி யென்பது பெற்றாம். ஏ, அசை,


                அந்திமாலைச் சிறப்புச் செய் காதை முற்றிற்று.