|
4. அந்திமாலைச் சிறப்புச்செய் காதை
|
15
20
|
தாழ்துணை துறந்தோர் தனித்துய ரெய்தக்
காதலர்ப் புணர்ந்தோர் களிமகிழ் வெய்தக்
குழல்வளர் முல்லையிற் கோவலர் தம்மொடு
மழலைத் தும்பி வாய்வைத் தூத
அறுகாற் குறும்பெறிந் தரும்புபொதி வாசஞ்
சிறுகாற் செல்வன் மறுகில் தூற்ற
எல்வளை மகளிர் மணிவிளக் கெடுப்ப
மல்லல் மூதூர் மாலைவந் திறுத்தென
|
|
தாழ்துணை
துறந்தோர் தனித்துயர் எய்த - தம் மனத் திலே தங்கிய கொழுநரைப் பிரிந்திருக்கின்ற
மகளிர் ஒப்பற்ற துயரினை யெய்தவும், காதலர்ப் புணர்ந்தோர் களிமகிழ்வு எய்த- தம்
காதலரைக் கூடியிருக்கும் மகளிர் மிக்க மகிழ்ச்சியை அடையவும் ,குழல் வளர் முல்லையில்
- வேய்ங் குழலிலும் வளர் கின்ற முல்லையின் மலரிலும், கோவலர் தம்மொடு மழலைத்
தும்பி வாய் வைத்து ஊத - கோவலரும் இளமையுடைய வண்டு களும் முறையே வாயை வைத்து ஊதவும்,
அறுகாற் குறும்பு எறிந்து - வண்டுகளாகிய குறும்பினை யோட்டி, அரும்பு பொதி வாசம் - அரும்புகள்
உள்ளடக்கிய மணத்தினை, சிறுகாற் செல்வன் மறுகில் தூற்ற - இளங்தென்றலாகிய செல்வன்
தெருவெல்லாம் தூற்றவும், எல்வளை மகளிர் மணி விளக்கு எடுப்ப - ஒளி பொருந்திய வளையையுடைய
மகளிர் அழகிய விளக்கினை யேற்றவும், மல்லல் மூதூர் மாலை வந்து இறுத்தென - வளம் பொருந்திய
மூதூரின்கண்ணே மாலைப்பொழுது வந்து விட்டதாக ;
தாழ்தல் - தங்குதல் ; இவர் இடைவிடாது
நினைத்தலை அவர் மனத்திற் றங்குதலாகக் கூறினார். தனித்துயர் - தனிமையாலாகிய துயருமாம்.
குழலிலும் முல்லையிலும் கோவலரும் தும்பியும் ஊத என்றது நிரனிறை. இனி, 'குழல்வளர் முல்லையில்'
என்பதனைச் சிலேடையாக்கி, வேய்ங் குழலில் வளர்கின்ற முல்லை யென்னும் பண்ணைக் கோவலரும்,
கூந்தலில் வளர்கின்ற முல்லை மலரில் வண்டுகளும் ஊத என்றுமாம். குழல் - ஊதுங் குழலும்,
கூந்தலும். முல்லை- முல்லைப் பண்ணும், முல்லை மலரும். வளர்தல் - பொருந்துதல் தென்றல்
தளிர்ப்பித்தலும் பூப்பித்தலுஞ் செய்யத் தான் இடைப் புகுந்துண்டலின் வண்டினைக் குறும்பென்றார்.
மணி விளக்கு - மாணிக்க விளக்குமாம். கறைகெழு குடிகள் போல் தணந்தோர் துயரெய்தவும்,
அறைபோகு குடிகள் போல் புணர்ந்தோர் மகிழ்வெய்தவும், விருந்தின் மன்னர் போல மாலை
வந்ததென உவமங் கொள்க. இப் பதியின்கண் மாலைப்பொழுது வந்ததனைச் சாத்தனார் கூறுமிடத்தும்,
1"பைந்தொடி மகளிர் பலர் விளக்
கெடுப்ப'' எனவும். 2''கோவலர்
முல்லைக் குழன்மேற் கொள்ள'' எனவும் வந்துள் ளமை காண்க. |
1. திருநா. திருகுறு, திருவிடைம. 2.
தொல், எழுத். சூ, 356
|
|