4. அந்திமாலைச் சிறப்புச்செய் காதை


40




45

தாமரைக் கொழுமுறித் தாதுபடு செழுமலர்க்
காமரு குவளைக் கழுநீர் மாமலர்ப்
பைந்தளிர்ப் படலை பரூஉக்கா ழாரம்
சுந்தரச் சுண்ணத் துகளொடும் அளைஇச்
சிந்துபு பரிந்த செழும்பூஞ் சேக்கை
மந்தமா ருதத்து மயங்கினர் மலிந்தாங்கு
ஆவியங் கொழுந ரகலத் தொடுங்கிக்
காவியங் கண்ணார் களித்துயி லெய்த



39
உரை
46

       தாமரைக் கொழு முறி - தாமரையின் இளந்தளி ரினையும் தாதுபடு செழுமலர் - மகரந்தம் பொருந்திய அதன் செழுமையுடைய மலரினையும், காமரு குவளை - கண்டார்க்கு விருப்ப முண்டாகும் குவளை மலரினையும், கழுநீர் மாமலர் - கழு நீரின் சிறந்த மலரினையும், பைந்தளிர் - பச்சிலையுடன் கலந்து தொடுத்த, படலை - படலை மாலையும் பரூஉக்காழ் ஆரம் - பரிய முத்தின் கோவையும், சுந்தரச் சுண்ணத் துகளொடும் - அழகிய சுண்ணமாகிய பொடியுடன், அளைஇச் சிந்துபு பரிந்த செழும்பூஞ் சேக்கை - சிந்திக் கலந்து கிடந்த வளவிய பூஞ் சேக்கை யிடத்து, மந்த மாருதத்து மயங்கினர் மலிந்து - இளந் தென்றலால் மயங்கிக் காதல் மிக்கு, ஆங்கு ஆவியங் கொழுநர் அகலத்து ஒடுங்கி - அவ்விடத்து உயிர்போலும் கொழுநர் மார் பிடத்தே பொருந்தி, காவிஅம் கண்ணார் களித்துயில் எய்த - நீலோற்பல மலர்போன்ற அழகிய கண்களையுடைய மகளிரும் இன்பக் களியான துயில்கூட,

       காமம் மரு என்பது காமரு எனத் திரிந்து. காமம் வரு என்பது திரிந்த தென்பாருமுளர். படலை - இலைத் தொடை ; மலர்களும் இலையும் விரவித் தொடுத்த மாலை. காழ் - சரம் ; கோவை, ஆரம் - முத்து. ஆரக்காழ் எனவும், சிந்துபு அளைஇ எனவும் மாறுக. மயங்கினர், எச்ச முற்று. மலிந்து - மிக்கு ; காதன்மிக்கு என்க. ஆங்கு- அசையுமாம். ஆம் என்பதூஉம் அசை. மாதவியும் அவளன்றிக் கண்ணாரும் களித் துயிலெய்த வென்க. கண்ணால் என்று பாடமோதி, மார்பிடத்தே கண்களைப் பொருந்த வைத்து என்றுரைப்பர் அடி யார்க்குநல்லார். களித் துயில் - கலவியாலுண்டான அவசமாகிய துயில்.