4. அந்திமாலைச் சிறப்புச்செய் காதை




50




55

அஞ்செஞ் சீறடி யணிசிலம் பொழிய
மென்துகில் அல்குல் மேகலை நீங்கக்
கொங்கை முன்றிற் குங்கும மெழுதாள்
மங்கல வணியிற் பிறிதணி மகிழாள்
கொடுங்குழை துறந்து வடிந்துவீழ் காதினள்
திங்கள் வாண்முகம் சிறுவியர் பிரியச்
செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் மறப்பப்
பவள வாணுதல் திலகம் இழப்பத்
தவள வாணகை கோவலன் இழப்ப
மையிருங் கூந்தல் நெய்யணி மறப்பக்
கையறு நெஞ்சத்துக் கண்ணகி யன்றியும்



47
உரை
57

(அஞ்செஞ் சீறடி ......... கண்ணகியன்றியும்)

       அம் செஞ் சீறடி அணி சிலம்பு ஒழிய - அழகிய சிவந்த சிறிய அடிகள் அணியுஞ் சிலம்பினை ஒழியவும், மென்றுகில் அல்குல் மேகலை நீங்க - மெல்லிய துகிலை யுடுத்த அல்குலிடத்து மேகலை நீங்கவும், திங்கள் வாள்முகம் சிறுவியர்ப்பு இரிய - மதிபோலும் ஒள்ளிய முகத்திலே சிறு வியர்வு நீங்கவும், செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் மறப்ப - சிவந்த கயல்போலும் நெடியகண் தீட்டும் மையினை மறக்கவும், பவள வாள் நுதல் திலகம் இழப்ப - பவளம்போற் சிவந்த ஒள்ளிய நெற்றி திலகத்தை இழக்கவும், தவள வாள் நகை கோவலன் இழப்ப - வெள்ளிய ஒளிபொருந்திய முறுவலைக் கோவலன் இழக்கவும், மை இருங் கூந்தல் நெய் அணி மறப்ப - கருமையுடைய நீண்ட கூந்தல் புழுகு நெய் அணிதலை மறக்கவும், கொங்கை முன்றில் குங்குமம் எழுதாள் - கொங்கை முற்றத்தில் குங்குமம் பூசாளாய், மங்கல அணியிற் பிறிது அணி அணியாள் - மங்கலவணியின் வேறான அணியை விரும்பாளாய், கொடுங்குழை துறந்து வடிந்துவீழ் காதி னள் - வளைவாகிய குண்டலத்தைத் துறந்து வடிந்து தாழ்ந்த காதினை யுடையளாய், கையறு நெஞ்சத்துக் கண்ணகி அன்றியும் - செயலற்ற நெஞ்சத்தையுடைய கண்ணகியும், அவளன்றியும்,

       கோவலன் தன்னைப் பிரிந்தமையின் யாதும் ஒப்பனை செய்திலள் என்பார் சிலம்பொழிய மேகலைநீங்க என்றிங்ஙனங் கூறினார். மங்கலவணி - இயற்கை யழகுமாம். வடிந்து - அழுது வடிந்து ; 1 அணிபறித் தழகு செய்யும்'' என்றாற்போலக் 'குழை துறந்து வடிந்து வீழ் காதினள்' என்றார். வியர் பிரிய எனப் பிரித்து, விகா ரத்தால் ஒற்று மிக்க தென்பாருமுளர். சிறு வியர் கூட்டத்தாற் றோன்றுவது. முன் கலவியாற் சிவந்த கண் என்க. பவளம்போற் சிவந்த திலகம் என்றுமாம். கண்ணகியின் முறுவல் கண்டு இன் புறாமை கோவலற்குப் பெரியதோ ரிழப்பென்பார் 'தவள வாணகை கோவலனிழப்ப' என்றார். எழுதாள் மகிழாள் காதினள் என்பன எதிர்மறையும் உடன்பாடுமாகிய குறிப்பெச்ச முற்றுக்கள். இனி, அடி, அல்குல், முகம், கண், நுதல், கூந்தல் என்பன தம்மை யணியுஞ் சிறப்பை முறையே சிலம்பு, மேகலை, வியர், அஞ்சனம், திலகம், நெய் என்பன இழக்கவென்றலுமாம். செயவெனெச்சங்களை எழு தாள் முதலிய எச்சங்களால் முடித்து. அவற்றைக் கையற்ற என்னும் பெயரெச்ச வினையான் முடிக்க, கண்ணகியும் அன்றியும் என விரித்துரைக்க,


1. கம்பரா, அங்கதன்றூது.