4. அந்திமாலைச் சிறப்புச்செய் காதை



60




65




70

காதலர்ப் பிரிந்த மாதர் நோதக
ஊதுலைக் குருகின் உயிர்த்தன ரொடுங்கி
வேனிற் பள்ளி மேவாது கழிந்து
கூதிர்ப் பள்ளிக் குறுங்கண் அடைத்து
மலையத்து ஆரமு மணிமுத் தாரமும்
அலர்முலை யாகத்து அடையாது வருந்தத்
தாழிக் குவளையொடு தண்செங் கழுநீர்
வீழ்பூஞ் சேக்கை மேவாது கழியத்
துணைபுண ரன்னத் தூவியிற் செறித்த
இணையணை மேம்படத் திருந்துதுயில் பெறாஅது
உடைப்பெருங் கொழுநரோ டூடற் காலத்
திடைக்குமி ழெறிந்து கடைக்குழை யோட்டிக்
கலங்கா வுள்ளங் கலங்கக் கடைசிவந்து
விலங்கிநிமிர் நெடுங்கண் புலம்புமுத் துறைப்ப




58
உரை
71

(காதலர்ப் பிரிந்த ........ புலம்புமுத் துறைப்ப)

       காதலர்ப் பிரிந்த மாதர் - தம் காதலரைப் பிரிந்த மாதர்கள், நோதக - கண்டார்க்கு வருத்தமுண்டாகும்படி, ஊது உலைக் குருகின் உயிர்த்தனர் ஒடுங்கி - உலையின்கண் ஊதுகின்ற துருத்தியின் மூக்குப்போல அழலெழ உயிர்த்தனராய் ஒடுங்கி, வேனிற் பள்ளி மேவாது கழிந்து - இவ் விளவேனிற் காலத்திற் கமைந்த நிலாமுற்றத்தில் மேவாது கழிந்து, கூதிர்ப் பள்ளி - கூதிர்க்காலத்திற் கமைந்த இடை நிலத்திலே, குறுங்கண் அடைத்து - தென்றலும் நிலவும் புகாமற் குறிய சாளரக் கண் களை யடைத்து, மலயத்து ஆரமும் மணிமுத்து ஆரமும் அலர் முலை ஆகத்து அடையாது வருந்த - பொதியிலில் உண்டாகிய சந்தனமும் அழகிய முத்தின் கோவையும் பரந்த முலையினை யுடைய மார்பில் அடையப்பெறாது வருந்தவும், தாழிக் குவளை யொடு தண் செங்கழுநீர் வீழ் பூஞ் சேக்கை மேவாது கழிய - தாழியில் மலர்ந்த குவளையும் செங்கழுநீரும் முதலிய குளிர்ந்த மலர்கள் தாம் விரும்பிய பூஞ்சேக்கையில் மேவப் பெறாது வருந்தவும், துணைபுணர் அன்னத் தூவியிற் செறித்த இணை அணை மேம்படத் திருந்து துயில் பெறாஅது - தன் சேவலொடு புணர்ந்த அன்னப்பேடை அப் புணர்ச்சியான் உருகி யுதிர்த்த வயிற்றின் மயிரைத் திணித்த இணைத்தல் பொருந்திய அணையின் மீதே திருந்திய துயிலைப் பெறாமல், உடைப்பெருங் கொழுந ரோடு ஊடற் காலத்து - தம்மையுடைய கணவரோடு முன்பு ஊடிய காலத்து, இடைக்குமிழ் எறிந்து - இடைநின்ற குமி ழினை யெறிந்து, கடைக்குழை ஓட்டி - கடை நின்ற குழையைத் துரந்து, கலங்கா உள்ளம் கலங்கக் கடை சிவந்து - அவரது கலங்காத நெஞ்சமும் கலங்கும்படி கடை சிவந்து, விலங்கி நிமிர் நெடுங்கண் - குறுக்கிட்டுப் பிறழும் நெடிய கண்கள், புலம்பு முத்து உறைப்ப - தனிமையாலே கண்ணீர்த் துளியைச் சிந்த.

       கண்ணகியும் ஏனைக் காதலர்ப் பிரிந்த மாதரு மென்க. குருகு - துருத்தி ; ஊதுலைக் குருகு என்றது வெளிப்படை. முத்தாகிய ஆர மும் எனலுமாம். ஆகத்து முலையென மாறினும் அமையும். தாழி யுள்ளே குவளையை வைத்து வளர்ப்பர் ; 1"தாழியுண் மலர்ந்த தண் செங் குவளை '' என்பது காண்க. வீழ்தல் - விரும்புதல், மேவாது - பள்ளித்தாமமாய் மேவப்பெறாமல் என்றுமாம். கழிய - வருந்த வென்னும்பொருட்டு. தூவி - அடிவயிற்றின் மயிர். இணையணை- இணைதலையுடைய பலவாகிய அணை ;

       2 "இணைபட நிவந்த நீலமென் சேக்கையுட்
       டுணைபுண ரன்னத்தின் றூவிமெல் லணையசை''


       என்றார் பிறரும். திருந்து துயில் - கணவர் மார்பிலே துயிலும் களித்துயில். கலங்காவுள்ளம் என்றார், 3பெருமையும் உரனும் ஆடூஉ மேன '' என்பவாகலின். புலம்பு முத்துறைப்ப - உவகைக் கண்ணீர் சிந்தாது துன்பக் கண்ணீர் சிந்த என்றுமாம். குமிழம் பூவும் முத்தும் மூக்கிற்கும் நீர்த்துளிக்கும் உவமை. உறைப்ப - உகுப்ப.


1. பெருங், 3. 5 ; 87. 2. கலி. 72 : 1--2. 3. தொல். பொருளதி. சூ. 98.