|
5. இந்திரவிழவூரெடுத்த காதை
|
5 |
அலைநீ
ராடை மலைமுலை யாகத்து
ஆரப் பேரியாற்று மாரிக் கூந்தற்
கண்ணகன் பரப்பின் மண்ணக மடந்தை
புதையிருட் படாஅம் போக நீக்கி
உதய மால்வரை உச்சித் தோன்றி
உலகுவிளங் கவிரொளி மலர்கதிர் பரப்பி |
|
அலைநீர்
ஆடை - கடலாகிய ஆடையினையும், மலை முலை - மலையாகிய முலையினையும், ஆகத்து ஆரப் பேர்
யாற்று - அம் முலையையுடைய மார்பினிடத்துப் பெரிய யாறாகிய முத்து வடத்தினையும், மாரிக்
கூந்தல் - மேகமாகிய கூந்தலினையும் உடைய, கண் அகன் பரப்பின் மண்ணக மடந்தை இடமகன்ற
பரப்பினையுடைய நிலமகளின், புதைஇருட் படாஅம் போக
நீக்கி - உடம்பை மறைத்த இருளாகிய போர்வையைப் போகு மாறு நீக்கி, உதய மால் வரை
உச்சித் தோன்றி - பெரிதாகிய உதய கிரியின் உச்சியிலே உதித்து, உலகு விளங்கு அவிர்
ஒளி - உலகம் விளங்குதற்குக் காரணமாகிய ஆதித்தன், மலர்கதிர் பரப்பி - விரிந்த
கிரணங்களைப் பரப்ப ;
பேரியாற்று ஆரம் என மாறுக. விளங்கு
என்பது ஏதுப்பெயர் கொண்டது. அவிர்ஒளி - விளங்கும் ஒளி ; ஆதித்தன். பரப்பி என்பதனைப்
பரப்ப வெனத் திரிக்க. அரசு கெடுத் தலம்வரும் மண் மடந்தை போர்த்த இருளாகிய படாத்தைத்
தன் கதிர்க்கைகளால் நீக்கி என் மேலிற் காதையுடன் தொடர்பு படுத்துரைக்க. 1"மணி
மலைப் பணைத்தோண் மாநில மடந்தை, அணிமுலைத் துயல்வரூஉ மாரம் போலச், செல்புன் லுழந்த
சேய்வரற் கான்யாற்று" என்றார்
பிறரும்.
[அடி: மலை - பொதியிலும், இமயமும்
; இவற்றைச் சாதியொருமையாற் கூறினார் ; 'பொதியிலு மிமயமும் புணர்முலை யாக' என்றார்
கதையினும். புதைத்தல் - போர்த்தல் ; மலைநாட்டு வழக்கு. வாளாது மண்மடந்தை யென்னாது
கண்ணகன் பரப்பின் மண்மடந்தை யென்று மிகுத்துக் கூறினார், அத்தன்மையாளைப் போர்த்த
நீலப்படாத்தைத் தன் றேசினால் நீக்கிய ஒளி யெனற்கு ; எனவே செம்பியன் மரபுயர்ச்சி
கூறியவா றாயிற்று.]
1.சிறுபாண்.
1--3
|
|