|
5. இந்திரவிழவூரெடுத்த காதை
|
40
45
50
55 |
கோவியன்
வீதியுங் கொடித்தேர் வீதியும்
பீடிகைத் தெருவும் பெருங்குடி வாணிகர்
மாட மறுகும் மறையோ ரிருக்கையும்
வீழ்குடி உழவரொடு விளங்கிய கொள்கை
ஆயுள் வேதருங் காலக் கணிதரும்
பால்வகை தெரிந்த பன்முறை யிருக்கையும்
திருமணி குயிற்றுநர் சிறந்த கொள்கையொ
டணிவளை போழுநர் அகன்பெரு வீதியும்
சூதர் மாகதர் வேதா ளிகரொடு
நாழிகைக் கணக்கர் நலம்பெறு கண்ணுளர்
காவற் கணிகையர் ஆடற் கூத்தியர்
பூவிலை மடந்தையர் ஏவற் சிலதியர்
பயில்தொழிற் குயிலுவர் பன்முறைக் கருவியர்
நகைவே ழம்பரொடு வகைதெரி யிருக்கையும்
கடும்பரி கடவுநர் களிற்றின் பாகர்
நெடுந்தே ரூருநர் கடுங்கண் மறவர்
இருந்துபுறஞ் சுற்றிய பெரும்பா யிருக்கையும்
பீடுகெழு சிறப்பிற் பெரியோர் மல்கிய
பாடல்சால் சிறப்பிற் பட்டினப் பாக்கமும் |
|
கோவியன் வீதியும் - பெரிய இராச வீதியும், கொடித் தேர் வீதியும் - கொடியணிந்த
தேரோடும் வீதியும், பீடிகைத் தெருவும் - கடைத்தெருவும், பெருங்குடி வாணிகர் - பெரிய
குடிப்பிறப்பையுடைய வாணிகரது, மாட மறுகும் - மாடங்களையுடைய தெருவும், மறையோர் இருக்கையும்
- வேதியர் இருக்குமிடங்களும், வீழ்குடி உழவரொடு - யாவரும் விரும்புங்
குடியினராகிய உழவரோடும், விளங்கிய கொள்கை ஆயுள் வேதரும் - சிறந்த கொள்கையையுடைய
மருத்துவ நூலோரும், காலக் கணிதரும் - சோதிடரும், பால்வகை தெரிந்த பன்முறை
இருக்கையும் - வேற்றுமை தெரிந்த பல முறைமையோ டிருக்கும் இருப்பிடங்களும், திருமணி குயிற்றுநர்
சிறந்த கொள்கையோடு அணிவளை போழுநர் அகன் பெரு வீதியும் - வேகடி
வேலை செய்வாரும் சிறந்த கொள்கையோடு அணியப்படும் வளையை அறுத்தியற்றுவாரும் வாழும்
அகன்ற பெரிய வீதியும், சூதர் மாகதர் வேதாளிகரொடு - நின்றேத்துஞ் சூதர், இருந்தேத்தும்
மாகதர், வைதாளியாடுவார் என்று சொல்லப்பட்ட இவரோடே, நாழிகைக் கணக்கர் - கடிகையாரும்,
நலம்பெறு கண்ணுளர் - கோலத்தானும் கூத்தானும் அழகு பெறும் சாந்திக் கூத்தரும், காவற்
கணிகையர் - காமக்கிழத்தியராகும் பரத்தையரும், ஆடற் கூத்தியர் - அகக் கூத்தாடும்
பதியிலாரும்,
பூ விலை மடந்தையர் - அற்றைப் பரிசம் கொள்வாரும், ஏவற் சிலதியர் - ஏவற்றொழில்
செய்து உள்வீடு காப்பவரும், பயில் தொழிற் குயிலுவர் - தமக்குரிய தொழிலிற் பயின்ற
குயிலுவக்
கருவியாளரும், பன்முறைக் கருவியர் - படைக்கும் விழவுக்கும் கொட்டும் பல முறையான வாச்சியக்காரரும்,
நகை வேழம்பரொடு - விதூடகருடன் இருக்கும், வகைதெரி இருக்கையும் -
இனத்தின் வகைதெரிந்த இருப்பிடங்களும், கடும்பரி கடவுநர் - விரைந்த செலவினையுடைய
புரவிகளைச் செலுத்துவாரும், களிற்றின் பாகர் - யானைப் பாகரும், நெடுந் தேர் ஊருநர்
-
நெடிய தேரினைச் செலுத்தும் தேர்ப்பாகரும், கடுங்கண் மறவர் - தறுகண்மையையுடைய காலாட்
படைத் தலைவரும், இருந்து புறம் சுற்றிய பெரும் பாய் இருக்கையும் - அரசன் கோயிலைப்
புறத்தே சூழ்ந்திருக்கும் பெரிய பரந்த இருப்புக்களும் என்னும் இவற்றையுடைய, பீடுகெழு சிறப்பிற்
பெரியோர் மல்கிய - பெருமை பொருந்திய சிறப்பினையுடைய பெரியோர் நிறைந்த,
பாடல்சால் சிறப்பிற் பட்டினப்பாக்கமும் - பாடலமைந்த சிறப்பினையுடைய பட்டினப்பாக்கமும்
; |
|