5. இந்திரவிழவூரெடுத்த காதை




70





75
புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும்
பூவும் புகையும் பொங்கலுஞ் சொரிந்து

துணங்கையர் குரவைய ரணங்கெழுந் தாடிப்
பெருநில மன்ன னிருநில மடங்கலும்
பசியும் பிணியும் பகையும் நீங்கி
வசியும் வளனுஞ் சுரக்கென வாழ்த்தி
மாதர்க் கோலத்து வலவையி னுரைக்கும்

மூதிற் பெண்டி ரோதையிற் பெயர

68
உரை
75

        புழுக்கலும் - அவரை துவரை முதலிய முதிரைப் பண்டங்களை வேகவைத்த புழுக்கலையும், நோவலையும் - எள் ளுருண்டையினையும் விழுக்கு உடை மடை - நிணத்துடன்
கூடின சோற்றையும், பூவும் - பூவினையும், புகையும் - புகையினையும், பொங்கலும் - பொங்கற்சோற்றினையும், சொரிந்து - பெய்து, துணங்கையர் குரவையர் - துணங்கைக் கூத்தினராயும்
குரவைக் கூத்தினராயும், அணங்கு எழுந்து ஆடி - தெய்வ மேறி ஆடி, பெருநில மன்னன் இருநிலம் அடங்கலும் - எம் வேந்தனுடைய பெரிய நிலம் முழுதும், பசியும் பிணியும் பகையும்
நீங்கி - பசி பிணி பகை யென்பன நீங்கி, வசியும் வளனும் சுரக்கென வாழ்த்தி - மழையும் வளமும் சுரக்கவென வாழ்த்தி, மாதர்க்கோலத்து வலவையின் உரைக்கும் மூதிற் பெண்டிர் -
வல்லமையால் உரைக்கும் அழகிய கோலத்தையுடைய மறக் குடிப்பெண்டிர், ஓதையிற் பெயர - ஆரவாரத்துடனே பலியிட்டுப்போன வளவிலே ;

        பொங்கல் - கள்ளென்பாரு முளர். பூவைச் சிதறிப் புகையை யெடுத்துப் புழுக்கல் முதலியவற்றைப் படைத்து என ஏற்ற வினைகள் விரித்துக்கொள்க. துணங்கை - சிங்கிக் கூத்து ; "பழுப்புடையிருகை முடக்கி யடிக்கத், தொடக்கிய நடையது துணங்கை யாகும்" என்பதனால் துணங்கையின் இயல்பறிக. குரவை - கைகோத்தாடுதல். பெருநில மன்னன் - அவனிபன் என்றபடி. வசி - மழை ; 1 "வசித்தொழி லுதவ மாநிலங் கொழுப்ப" என்றார் பிறரும். வசீகரம் என்பது அரும்பதவுரை. சுரக்கென, அகரந்தொகுத்தல். வலவை என்பதற்கு நாணிலி யெனப் பொருள் கொண்டு, நாணிலிகள் போலவாய் சோர்ந்துரைக்கு மியல்புடைய மூதிற் பெண்டிர் என்றலுமாம்.
மாதர்க் கோலம் - கண்டார் காதலிக்கும் ஒப்பனை. உரைக்கும் கோலத்து மூதிற் பெண்டிர் சொரிந்து ஆடி வாழ்த்தி ஓதையிற் பெயர என்க.

1 மணிமே. 14 : 57.