5. இந்திரவிழவூரெடுத்த காதை






80





85
மருவூர் மருங்கின் மறங்கொள் வீரரும்
பட்டின மருங்கிற் படைகெழு மாக்களும்
முந்தச் சென்று முழுப்பலி பீடிகை
வெந்திறன் மன்னற் குற்றதை யொழிக்கெனப்

பலிக்கொடை புரிந்தோர் வலிக்குவரம் பாகெனக்
கல்லுமிழ் கவணினர் கழிப்பிணிக் கறைத்தோற்
பல்வேற் பரப்பினர் மெய்யுறத் தீண்டி
ஆர்த்துக் களங்கொண்டோ ராரம ரழுவத்துச்
சூர்த்துக் கடைசிவந்த சுடுநோக்குக் கருந்தலை

வெற்றி வேந்தன் கொற்றங் கொள்கென
நற்பலி பீடிகை நலங்கொள வைத்தாங்
குயிர்ப்பலி யுண்ணு முருமுக்குரன் முழக்கத்து
மயிர்க்கண் முரசொடு வான்பலி யூட்டி

76
உரை
88

        மருவூர் மருங்கின் மறங்கொள் வீரரும் - மருவூர்ப் பாக்கத்திலுள்ள மறத்தினைக் கொண்ட வீ்ரரும், பட்டின மருங்கிற் படைகெழு மாக்களும் - பட்டினப் பாக்கத்திலுள்ள
படைக்கலமுடைய வீரரும், முந்தச் சென்று - முற்படச் சென்று, முழுப்பலி பீடிகை - பெரிய பலி பீடத்தில், வெந்திறல் மன்னற்கு உற்றதை ஒழிக்கெனப் பலிக் கொடை புரிந்தோர் - வெவ்விய திறலையுடைய எம் அரசற்கு உறும் இடையூற்றை யொழித்து வெற்றி தருகவெனத் தம்மைப் பலியாகக் கொடுத்தவர், வலிக்கு வரம்பு ஆகென - வலிமைக்கு எல்லையாகக் கடவரென வஞ்சினங் கூறி, கல் உமிழ் கவணினர் - கல்லினை வீசுங் கவணினை யுடையராய் கழிப்பிணிக் கறைத்
தோல் - ஊன் பொருந்திய கரிய தோலால் இயற்றப்பட்ட பரிசையுடன், பல் வேற் பரப்பினர் - பல வேலின் மிகுதியை யுடையராய், மெய் உறத் தீண்டி ஆர்த்து - தோள் தட்டி ஆரவாரஞ் செய்து, களம் கொண்டோர் - போர்க்களத்தைத் தம தாக்கிக் கொண்டோர், ஆர் அமர் அழுவத்து - அரிய அமர்க்களப் பரப்பிலே, சூர்த்து - அச்சத்தைச் செய்து, கடை சிவந்த சுடுநோக்கு - சுடுங் கொள்ளிபோலும் கடை சிவந்த பார்வையையுடைய, கருந்தலை - தமது பசுந் தலையை, வெற்றி வேந்தன் கொற்றம் கொள்கென - வேந்தன் வெற்றி கொள்க வென்று, நற் பலி பீடிகை நலம் கொள வைத்து - நன்றாகிய பலி பீடத்திலே நன்மை பொருந்த வைத்து, ஆங்கு - அப்பொழுதே,
உயிர்ப்பலி உண்ணும் உருமுக் குரல் முழக்கத்து மயிர்க்கண் முரசொடு - உயிர்ப்பலி யுண்ணும் இடியின் குரல் போலும் முழக்கத்தை யுடைய மயிர் சீவாத தோலாற் போர்த்த வீரமுரசத்தால்,
வான் பலி ஊட்டி - உயிராகிய சிறந்த பலியை உண்பிக்க ;

        வீரரும் மாக்களுமாகிய களங்கொண்டோர் என்க. "வலிக்கு வரம்பாகென" என்பதற்கு வலிக்கு வரம்பாகக் கடவ ரென முசுகுந்த மன்னனுடைய குழுவும் ஆயத்தாரும் அக்காலத்தே நியமித்தலாலே என்பர் அடியார்க்கு நல்லார். மற்றும் அவர், 'கருந்தலை... கொற்றங் கொள்கென' என்பதற்குப் பசுந்தலை வேந்தன் கொற்றங் கொள்கெனப் பேசும்படி என்றும், 'நலங் கொள வைத்து'
என்பதற்கு அரிந்த தலையிற் குலைந்த மயிரையுங் கோதி முடித்துக் குருதித் திலதத்தையும் நுதலிலே அணிந்து வைத்து என்றும், 'முரசொடு வான்பலி யூட்டி' என்பதற்கு அக் குறை யுடல்கள் தமக்கு வாயின்மையின் தத்தம் தோளிற் பூண்ட மயிர்க்கண் முரசின் வாயால் உயிர்க்கடன் தந்தோம் கொண்மினென்று நின்று பலி யூட்டி என்றும் உரைப்பர். இவற்றிற்கு அவர் ஆதாரமாகக் கொண்டவை ;

          1 "அடிக்கழுத்தி னுடன்சிரத்தை யரிவ ராலோ அரிந்தசிர மணங்கின்கைக் கொடுப்ப             ராலோ கொடுத்தசிரங் கொற்றவையைத் துதிக்கு மாலோ குறையுடலங் கும்பிட்டு             நிற்கு மாலோ"

          2 "மோடி முன்றலையை வைப்ப ரேமுடி குலைந்த குஞ்சியை முடிப்பரே ஆடி             நின்றுகுரு திப்பு துத்திலத மம்மு கத்தினி லமைப்பரே" என்பன,

        கழி - ஊன். பிணி - பிணித்தல். கறை - கறுப்பு. உயிர்ப் பலி யுண்ணும் என்றது முரசிற்கு அடை.

          3 "மறியருந்தும் திண்பிணி முரசம்" என்றார் பிறரும். மயிர்க்கண் முரசு - புலியைப்             பொருது கொன்று நின்று சிலைத்துக் கோட்டு மண்கொண்ட ஏறு இறந்துழி அதன்             உரிவையை மயிர் சீவாமற் போர்த்த முரசு ; என்ன?

          4 "கொல்லேற்றுப் பசுந்தோல் சீவாது போர்த்த மயிர்க்கண் முரச மோவில கறங்க"
             எனவும்,

          5 "புனைமருப் பழுந்தக் குத்திப் புலியொடு பொருது வென்ற கனைகுர லுருமுச்             சீற்றக் கதழ்விடை யுரிவை போர்த்த துனைகுரன் முரசத் தானைத் தோன்றலைத்             தம்மி னென்றான் நனைமல ரலங்கற் கண்ணி நந்தனுந் தொழுது சேர்ந்தான்"

எனவும் கூறினாராகலின்.

        ஊட்டி - ஊட்டவெனத் திரிக்க. இஃது அவிப்பலியின்பாற்படும்.

1. கலிங்க. கோயில். 15. 2. இதன்பின், 'என்பது கவிச் சக்கர விருத்தி' என்ற குறிப்புள்ளது. 3.புறப்பொருள். முரசவுழிஞை. 4. மதுரைக். 732--3 5. சீவக. 2899