|
5. இந்திரவிழவூரெடுத்த காதை
|
90
|
இருநில
மருங்கிற் பொருநரைப் பெறாஅச்
செருவெங் காதலின் திருமா வளவன்
வாளுங் குடையும் மயிர்க்கண் முரசும்
நாளொடு பெயர்த்து நண்ணார்ப் பெறுகவிம்
மண்ணக மருங்கினென் வலிகெழு தோளெனப்
புண்ணியத் திசைமுகம் போகிய அந்நாள |
|
இருநில மருங்கிற் பொருநரைப் பெறாஅ - தமிழகத்திலே தன்னோடு எதிர்த்துப் பொரும் அரசரை
மேற்கும் தெற்கு மாகிய இரு திசையினும் பெறாத, செருவெங் காதலிற் றிருமா
வளவன் - கரிகாற் பெருவளத்தான் போரில் மிக்க விருப்ப முடையனாதலின் (வட திசையிலாயினும்
பகை பெறலாமெனக் கருதி), வாளும் குடையும் மயிர்க்கண் முரசும் நாளொடு பெயர்த்து - வாள்
குடை முரசு என்பவற்றை நல்ல நாளிலே புறப்படச் செய்து, நண்ணார்ப் பெறுக இம் மண்ணக மருங்கின்
என் வலி கெழு தோள் என - என் வலி பொருந்திய தோள்கள் இத் திசையி லாயினும் பகைவரைப்
பெறவேண்டுமென்று தான் வழிபடு தெய்வத்தை மனத்தால் வணங்கி, புண்ணியத் திசை
முகம் போகிய அந்நாள் - அவ் வடதிசையிடத்தே சென்ற அந்நாளில் ;
இருநிலம் - இரு திசை ; சேர பாண்டியர்
தன் ஆணைக்கு அடங்கினர்
என்றவாறாயிற்று. வெங் காதல் - மிக்க விருப்பம். நாளொடு பெயர்த்தல் - நாட்கோள்
; வாணாட்கோள், குடைநாட்கோள், முரசுநாட்கோள் என்க. 1
"நாட்கொள்ளலாவது நாளும் ஓரையும்
தனக்கேற்பக் கொண்டு செல்வுழி அக்காலத்திற்கு ஓர் இடையூறு தோன்றியவழித் தனக்கு இன்றியமையாதனவற்றை
அத் திசை நோக்கி அக்காலத்தே முன்னே செல்ல விடுதல்" என்பர் நச்சினார்க்கினியர்.
ஆசிரியர் தொல்காப்பியனார் 2 "குடையும்
வாளும் நாள் கோள்" என உழிஞைத் திணையுட் கூறியுள்ளார். வெண்பாமாலை யுடையார் வஞ்சித்
திணைக்கும் உழிஞைத்திணைக்கும் இவ்விரு நாட் கோளும் கூறியுள்ளார். கரிகாலன் மேற்சென்றது
வஞ்சியாகலின் இளங்கோவடிகள் பன்னிரு படலத்தையும் தழுவி இச் செய்யுளை இயற்றியுள்ளாரென்று
கொள்ளுதல் வேண்டும். பன்னிருபடலக் கருத்தைத் தழுவியன பின்னரும் ஆண்டாண்டுக் காட்டப்
பெறும். முரசுநாட்கோள் என்பது இனம் பற்றி அடிகள் தாமாக அமைத்துக் கொண்டது போலும்.
புண்ணியத் திசை - வடதிசைக் கொரு பெயர். முகம் - இடம்.
1.
தொல். பொருளதி. 13--உரை. 2.
தொல். பொருளதி. 13--உரை.
|
|