5. இந்திரவிழவூரெடுத்த காதை

105





110
பொன்னினும் மணியினும் புனைந்தன வாயினும்

நுண்வினைக் கம்மியர் காணா மரபின
துயர்நீங்கு சிறப்பினவர் தொல்லோ ருதவிக்கு
மயன்விதித்துக் கொடுத்த மரபின இவைதாம்
ஒருங்குடன் புணர்ந்தாங் குயர்ந்தோ ரேத்தும்
அரும்பெறன் மரபின் மண்டப மன்றியும

105
உரை
110

        பொன்னினும் மணியினும் புனைந்தன ஆயினும் - பொன்னாலும் மணியாலும் புனையப்பட்டனவாயினும், நுண்வினைக் கம்மியர் காணா மரபின - நுண்ணிய தொழிலை வல்ல
கம்மியராற் செய்யப்படாதன ; துயர் நீங்கு சிறப்பின் அவர் தொல்லோர் உதவிக்கு - பிறர் துயர் நீங்குதற்கு ஏதுவாகிய சிறப்பினையுடைய அம் மூவருடைய தொல்லோர் ஓரோர் காலத்துச் செய்த உதவிக்குக் கைம்மாறாக, மயன்விதித்துக் கொடுத்த மரபின - மயனால் நிருமித்துக் கொடுக்கப்பட்ட
இயல்பையுடையன ; இவைதாம் ஒருங்கு உடன் புணர்ந்து ஆங்கு - ஒன்றற்கொன்று சேய் நாட்டனவாகிய இவைதாம் ஒரு நாட் டோரூரின்கண் ஒருங்கு சேரப்பட்டு, உயர்ந்தோர் ஏத்தும் அரும்பெறல் மரபின் மண்டபம் - பெரியோரால் ஏத்தப்படும் பெறுதற்கரிய தன்மையை யுடைய மண்டபத்தும் ; காண்டல் - செய்தல். தொல்லோர் வானோர்க்குச் செய்தவுதவிக்கு என்றுமாம். மயன் - தெய்வத் தச்சன். விதித்தல் - மனத்தால் நிருமித்தல், தாம் ஆங்கு என்பன அசை. காணா மரபினவும்
கொடுத்த மரபினவுமாகிய பந்தர் மண்டபம் தோரணவாயில் என்னுமிவை புணர்ந்து ஏத்தும் மண்டபம் என்க. இம் மூன்றும் ஒருங்கு கூடி ஒரு மண்டபமாதலை, மேல் நடுகற் காதையில், 1"வச்சிர மவந்தி மகதமொடு குழீஇய, சித்திர மண்டபத் திருக்க வேந்தன்" என்றுரைத்தலானு மறிக.

        அன்றியும் -அது வொழிந்தும்,


1சிலப், 28: 86--7,