5. இந்திரவிழவூரெடுத்த காதை




125
வஞ்ச முண்டு மயற்பகை யுற்றோர்
நஞ்ச முண்டு நடுங்குதுய ருற்றோர்
அழல்வாய் நாகத் தாரெயி றழுந்தினர்
கழல்கண் கூளிக் கடுநவைப் பட்டோர்
சுழல வந்து தொழத்துயர் நீங்கும்
நிழல்கால் நெடுங்கல் நின்ற மன்றமும

122
உரை
127

        வஞ்சம் உண்டு மயற்பகை உற்றோர் - வஞ்சனையாற் சிலர் மருந்தூட்ட உண்டு பித்தேறினாரும், நஞ்சம் உண்டு நடுங்கு துயர் உற்றோர் - நஞ்சை உண்டு நடுங்கும்படியான துன்பமுற்றோரும், அழல்வாய் நாகத்து ஆர் எயிறு அழுந்தினர் - அழலும் விடத்தையுடைய பாம்பின் கூரிய எயிறு அழுந்தக் கடியுண்டாரும், கழல் கண் கூளிக் கடுநவைப்பட்டோர் - பிதுங்கின கண்ணையுடைய பேயினாற் கடுந்துன்ப முண்டாகப் பற்றப்பட்டோரும், சுழலவந்து தொழ - ஒருகாற் சூழ வந்து தொழுத வளவிலே, துயர் நீங்கும் - அத் துயர்கள் நீங்குதற்குக் காரணமாகிய, நிழல்
கால் நெடுங்கல் நின்ற மன்றமும் - ஒளியைச் சொரியும் நெடிய கல்நாட்டி நிற்கும் மன்றமும் ;

        வஞ்சமுண்டு - வஞ்சனைப்பட்டு என்றுமாம். மயல் - மருள் ; பித்து. மயலாகிய பகை யென்க. அழல் - அழல் போலும் நஞ்சு. ஆர் - கூர்மை. கழற்கண் என்பதன் விகாரமாகக் கொண்டு பச்சைக் கழல் போலும் கண் என்றலுமாம். நவை - துன்பம். சுழல - சூழ.