அரைசு மேம்படீஇய - தம் அரசனை மேம்படுத்தற்கு, அகனிலை மருங்கில் - அப் பதியின்கண்ணே,
உரைசால் மன்னன் கொற்றம் கொள்கென - புகழமைந்த வேந்தன் கொற்றம்
கொள்வானாக என வாழ்த்தி, மாஇரு ஞாலத்து மன்உயிர் காக்கும் - மிகப் பெரிய புவியின்கண்ணே
மிக்க உயிர்களைப் புரக்கும், ஆயிரத்து ஓர் எட்டு அரசுதலைக்கொண்ட - ஆயிரத் தெட்டு
அரசு தலையிற்கொண்ட, தண்நறுங் காவிரி - குளிர்ந்த நறிய காவிரியின், தாதுமலி பெருந்துறைப்
புண்ணிய நல்நீர் - பூந்தாது நிறைந்த பெரிய சங்கமத் துறையில் நன்றாகிய தீர்த்த
நீரை, பொற்குடத்து ஏந்தி - பொற்குடத்தால் ஏந்தி, மண்ண கம் மருள - மண்ணிலுள்ளோர்
மருட்சியுறவும், வானகம் வியப்ப - விண்ணிலுள்ளோர் வியக்கவும், விண்ணவர் தலைவனை
- வானோர்க் கரசனாய இந்திரனை, விழுநீர் ஆட்டி-மஞ்சனமாட்ட; அகனிலை - ஊர். ஆயிரத்தெட்டுக்
கலசநீர் கொண்டு மஞ்சன மாட்டுதல் மரபு. பொற்குடத்து நீரை ஏந்தி யென்றுமாம். ஆட்டி-
ஆட்டவெனத் திரிக்க. அரச குமரரும் பரத குமரரும் மஞ்சன மாட்ட வென்க.
[அடி: மண்ணக மருள - மண்ணகம் விண்ணகமாய்
மாறாட. அன்றி மண்ணிலுள்ளோர் இப்படியே அவ் விண்ணகமிருப்பதென ஒப்புக் காணவென்க
வானகம் வியப்ப - வானகத் துள்ளோர் தம் தூறக்கத்தினும் ஈது சிறப்புடைத் தென்று வியக்க.
விண்ணவர் தலைவன் - ஈண்டு அவன் வச்சிரம்.]
|