5. இந்திரவிழவூரெடுத்த காதை


170





175
பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்
அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும்

வால்வளை மேனி வாலியோன் கோயிலும்
நீல மேனி நெடியோன் கோயிலும்
மாலை வெண்குடை மன்னவன் கோயிலும்
மாமுது முதல்வன் வாய்மையின் வழாஅ
நான்மறை மரபின் தீமுறை யொருபால

169
உரை
175

        பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும் - தாய்வயிற்றுப் பிறவாத திருமேனியை யுடைய மாதேவனாகிய இறைவன் கோயிலும், அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயி லும் - ஆறுமுகத்தையும் செய்ய நிறத்தையுமுடைய முருக வேளின் அழகு விளங்குகின்ற கோயிலும், வால்வளை மேனி வாலியோன் கோயிலும் - வெள்ளிய சங்கு போலும் நிறத்தை யுடைய பலதேவன் கோயிலும் - நீல மேனி நெடியோன் கோயி லும் - நீலமணி போலும் நிறத்தையுடைய நெடிய மால் கோயி லும், மாலை வெண்குடை மன்னவன் கோயிலும் - முத்துமாலை யணிந்த வெண் கொற்றக் குடையையுடைய இந்திரன் கோயி லும் ஆகிய இவற்றில், மாமுது முதல்வன் வாய்மையின் வழாஅ- மிக்க முதுமையையுடைய இறைவனது வாய்மையிற் றப்பாத, நான்மறை மரபின் தீமுறை ஒருபால் - நாலாகிய வேதங்கள் சொல்லிய நெறியே ஒரு பக்கம் ஓமங்கள் நடக்க;

        பிறவா யாக்கை என விசேடித்தமையால் உயிரியல்பாகிய பிறப் பிறப்பில்லாதவன் இறைவன் ஒருவனே யென்பது பெற்றாம். அவன் யாவர்க்கும் தாயும் தந்தையு மாதலன்றி அவனுக்கோர் தாய் தந்தை யின்மையைத் 1 "தாயுமிலி தந்தையிலி தான்றனியன் காணேடி"
என்பதனானுமறிக. யாக்கை - அருளாற் கொள்ளுந் திருமேனி ; யாக்கையிற் பிறவாத பெரியோன் எனினுமமையும். வாலியோன் வெண்ணிறமுடையோன் : ஈண்டுப் பெயர் மாத்திரையாய் நின்றது.
மாமுது முதல்வன் - சிவபிரான் ; 2 "முன்னைப் பழம்பொருட்கு முன்னைப் பழம்பொருள்"
ஆதலின் மாமுது முதல்வன் என்றார். வாய்மையின் வழா என்ப தற்கு வாயினின்றும் நீங்காத என்றுரைத்தலுமாம். 3 "நன்றாய்ந்த நீணிமிர்சடை, முதுமுதல்வன் வாய் போகா, தொன்று புரிந்த வீரி
ரண்டின், ஆறுணர்ந்த வொருமுது நூல்" என்பதுங் காண்க. முது முதல்வன் - பிரமன் என்பாருமுளர்


1. திருவாசகம், சாழல், 3. 2. திருவெம். 9. 3 புறம், 166.