காதற் கொழுநனைப் பிரிந்து அலர்
எய்தா - தன்னாற் காதலிக்கப்பட்ட கொழுநனைப் பிரிந்து மெய் வேறுபாட்டால் அலரெய்தாத,
மாதர்க் கொடுங்குழை மாதவி தன்னோடு - அழகிய வளைந்த மகரக்குழையையுடைய மாதவியோடு,
இல்வளர் முல்லை மல்லிகை மயிலை - இல்லிலே வளராநின்ற முல்லை யும் மல்லிகையும் இருவாட்சியும்,
தாழிக் குவளை சூழ்செங்கழு நீர் - தாழியுள் மலர்ந்த குவளையும் வண்டு சூழும் செங்கழுநீரும்
ஆகிய, பயில்பூங் கோதைப் பிணையலிற் பொலிந்து - பூக்கள் நெருங்கிய கோதையாகிய
பிணையலால் விளக்கமுற்று, காமக் களி மகிழ்வு எய்தி - காமமாகிய கள்ளுண்டு களித்து,
காமர் பூம்பொதி நறுவிரைப் பொழில் ஆட்டு அமர்ந்து - அழகிய நறிய மணம் பொதிந்த
பூம்பொழிலில் விளையாட்டை விரும்பி, நாள் மகிழ் இருக்கை நாளங்காடியில் - நாடோறும்
மகிழ்ந் திருக்கும் இருப்பையுடைய நாளங்காடியில், பூமலி கானத்துப்
புதுமணம் புக்கு - பூ விற்குமிடங்களிற் பல பூக்களின் மணமாகிய புதிய மணத்தின் உள்புக்கு, புகையும் சாந்தும் புலராது சிறந்து - அகிற்புகை சாந்தென்னும் இவற்றின் செவ்வி வாய்ப்பு
மிக்கு, நகையாடு ஆயத்து நன்மொழி திளைத்து - நகைத்து விளையாடும் கூட்டத்தோடே காமக்
குறிப்பாகிய மகிழ்ச்சி மொழியிலே இடைவிடாது பயின்று, குரல்வாய்ப் பாணரொடு - குரலென்னும்
இசையைப் பாடும் வாயையுடைய பாணரோடும், நகரப் பரத்தரொடு - நகரத்திலுள்ள தூர்த்தரோடும்,
திரிதரு மரபிற் கோவலன்போல - உலாத்துந் தன்மையையுடைய கோவலனைப்போல, இளிவாய்
வண்டினொடு - இளியென்னும் இசையைப் பாடும் வண்டினோடும், இன்இள வேனிலொடு -
இனிய இளவேனிலோடும், மலயமாருதம்-பொதியிற் காற்றாகிய இளந்தென்றல், திரிதரு மறுகில்
- உலாவுதலைச் செய்யும் வீதி யிடத்தே ;
ஊரிலே
கோவலன்போல மாருதம் திரிதரு மறுகில் என்க. காதற் கொழுநனை என்பது முதல் நன்மொழி
திளைத்து என்பது காறும் கோவலற்கும் மாருதத்திற்கும் ஒத்த பண்பு. கண்ணகி
பிரிந்து அலரெய்தலால் அலரெய்தாத மாதவி என்றார். மாருதத் திற்கேற்ப உரைக்குமிடத்து
மாதவி குருக்கத்தியாம். இப்பொருட்கு: கொழுநனைப் பிரிந்து - கொழுவிய அரும்பாந்தன்மையை
விட்டு, அலர் எய்தா - முதிர்ந்து அலராகாத, கொடுங்குழை - வளைந்த தளிரையுடைய என்றுரைத்துக்
கொள்க. இல்வளர் என் னும் அடையை முல்லை முதலிய மூன்றற்கும், சூழ் என்னும் அடையை
எல்லாப் பூக்கட்கும் கூட்டுக. சூழ்தல் வினைக்கு வண்டு என்னும் எழுவாய் வருவிக்க. கோதை
- ஒழுங்காகிய என்றுமாம். ஆட்டு - விளையாட்டு ; புணர்ச்சி. பூ விற்குமிடத்தைக் கானம்
என் றது பூக்களின் மிகுதிபற்றி. குரலுக்கு இளி கிளையாதலின் குரல் வாய், இளிவாய்
என்றார். பரத்தர் - பழிகாமுகர்; தூர்த்தர், மாருதத்திற்குக் கோவலனும், வண்டிற்குப்
பாணரும், வேனிற்குப் பரத்தரும் உவமம். அடிகள் இவ் வுவம வாயிலாகக் காமத்தாற் கோவலனெய்திய
சிறுமையை அங்கை நெல்லியென விளக்கியுள் ளார். பாணர் முதலிய மூவரோடும் வண்டு முதலிய
மூன்றற்கும் உள்ள ஒத்த பண்புகளை யறிந்து உவமங்கூறிய திறப்பாடு பெரிதும் பாராட்டற்
குரியதாகும். பாடுதலும் கள்ளுண்டலும் பாணர்க்கும் வண்டுக்கும் ஒத்த பண்பு ; கோவலன்
பரத்தர் பற்றுக்கோடாகப் பாணரொடுந் திரிதல்போல மாருதம் இளவேனில் பற்றுக்கோடாக
வண்டோடும் திரியா நின்றது; என்றின்னோரன்ன நயங்களை ஒர்ந் துணர்க.
இனி, அவ் வீதி வருணனை கூறப்படுகின்றது.
|