5. இந்திரவிழவூரெடுத்த காதை



210
நீர்வாய் திங்கள் நீள்நிலத் தமுதின்
சீர்வாய் துவலைத் திருநீர் மாந்தி
மீனேற்றுக் கொடியோன் மெய்பெற வளர்த்த
வான வல்லி வருதலும் உண்டுகொல

208
உரை
211

        நீர் வாய் திங்கள் நீள்நிலத்து - ஈரம் வாய்ப்புப் பெற்ற திங்களாகிய பெரிய நிலத்தே, அமுதின் சீர்வாய் துவலைத் திருநீர் மாந்தி - அமுத கலையின் சீர்மை பொருந்திய துவலையையுடைய அழகிய நீரைப் பருகி, மீன் ஏற்றுக் கொடி யோன் மெய்பெற வளர்த்த - வடிவுபெற மகரக் கொடியை யுடைய காமனானவன் வளர்த்த, வானவல்லி வருதலும் உண்டு கொல் - மின்னுக்கொடியானது இந்நிலத்தே வருதலும் உண்டாயிற்றோ எனவும்,

       
அமுதின் நீர் எனவும், மாந்தி மெய்பெற எனவும், கொடியோன் வளர்த்த எனவும் கூட்டுக. இனி, மெய்பெற என்பதற்குக் காமன்றான் முன்பு இறைவனது நுதல்விழியானிழந்த தன் மெய்பெறுதற்காக என்று கூறி, வளர என ஒரு சொல் வருவித்து, மாந்திவளர வளர்த்த என்றுரைப்பர் அடியார்க்கு நல்லார்.