உருவிலாளன் ஒரு பெருஞ்சேனை அநங்க
னுடைய ஒப்பற்ற பெரிய சேனையாகிய பரத்தையரது, இகல் அமர் ஆட்டி - ஊடலாகிய மாறுபட்ட
போரை இங்ஙனம் புகழ்ந்து சொல்லி வென்று, எதிர்நின்று விலக்கி - அவர் போகாமல்
எதிர் நின்று தடுத்துப் புணர்தலின், அவர் எழுதுவரி கோலம் முழுமெயும் உறீஇ - அவருடைய
மார்பிலும் தோளிலு மெழுதிய தொய்யில் முதலிய பத்திக் கீற்றுத் தமது மார்பமுழுதும்
உறுதலானே, விருந்தொடு புக்க பெருந்தோட் கணவ
ரொடு - விருந்தொடு புகுந்த பெரிய தோளையுடைய கணவரோடு, உடன் உறைவு மரீஇ - உடன்
உறைதலைப் பொருத்தி, ஒழுக்கொடு புணர்ந்த - வழிபாட்டுடன் கூடிப் புணர்ந்த, வடமீன்
கற்பின் மனையுறை மகளிர் - அருந்ததிபோலும் கற்பையுடைய இல்லற மகளிரை, (அக் கணவரே),
மாதர் வாள் முகத்து - இம் மாதருடைய ஒளி பொருந்திய முகத்து, மணித்தோட்டுக் குவளைப்
போது புறங்கொடுத்துப் போகிய செங்கடை - நீலமணிபோலும் இதழையுடைய குவளைப் பூக்கள்
புறங்கொடுத்துப் போதற்குக் காரணமாகிய கரிய கண்களின் கடைச் சிவப்பு, விருந்தின்
தீர்ந்திலது ஆயின் - அவ் விருந்தால் நீங்கியதில்லையாயின், யாவதும் மருந்தும் தருங்கொல்
இம் மாநில
வரைப்பு என - இப் பெரிய நிலவெல்லை இதற்கு ஒரு மருந்தையும் தரவல்லதோ எனத் தமது
நெஞ்சொடு கூறி, கையற்று நடுங்கும் - செயலற்று நடுங்காநிற்கும், நல்வினை நடுநாள் -
விழா நடு நாளில் ;
ஆட்டி
- வென்று. புலவியாற் கூடாத மகளிரை உண்டுகொல் உண்டுகொல் உண்டுகொல் உண்டுகொல்
என்று புகழ்ந்து புலவி தீர்த்து என்றபடி. வரிகோலம், வினைத்தொகை. இனி, வீதியிற்
கண்டோர்கள் அங்ஙனம் புகழ்ந்து கூறக் காமன் சேனையாகிய மகளிர் தம் உறுப்புக்களால்
அமர்செய்வித்துப் போவாரைப் போகா மற் றடுத்தலின் அவருடைய தொய்யில் முதலியன
உறுதலால் விருந்தொடு புக்க கணவர் என்றுமாம். பரத்தையரது எழுதுவரி கோலத்தைத் தம்
உடம்பிலே கொண்டு வருதலாற் பரத்தையர் கூட்ட முண்மை யுணர்ந்து உள்ளங் கொதிக்கும்
மனைவியரின் சிவப்பினை மாற்றுதற்கு விருந்தொடு புக்காரென்க. எனவே, விருந்தினரைக்
கண்டுழி ஊடலைக் கைவிடுத்துக் கணவரையும் விருந்தினரையும் எதிரேற்று மகிழ்தல் கற்புடை
மகளிரின் கடப்பாடாதல் பெற்றாம். ஒழுக்கொடு புணர்ந்து உடனுறைவு மரீஇய என்று மாறுதலுமாம்.
மகளிரைக் கணவர் நெஞ்சொடு புகழ்ந்து கூறி நடுங்கும் என்க. மனைவியர் ஊடல் தீர்ந்திலதாயிற்
செய்வதொன்றின்மையை நினைந்து நடுங்குவர். நிலவரைப்பு - நிலவெல்லையிலுள்ளோர்;
அன்றி, மிருத சஞ்சீவினி யிறுதியாகவுள்ள மருந்துகளைத் தரும் நிலம் இதற்கோர் மருந்து
தரமாட்டா தென்றுமாம். நல்வினை - நன்றாகிய வினை ; விழா.
|