உள் அகம் நறுந் தாது உறைப்ப -
உள்ளேயுள்ள நறிய தாதுகள் ஊறிப் பிலிற்றுதலால், மீது அழிந்து கள் உக நடுங்கும் கழுநீர்போல
- தேன் அகம் நிறைந்து மீது அழியு மாறு பொழிய நின்று நடுங்கும் கழுநீர் மலரைப் போல,
கண்ணகி கருங்கணும் மாதவி செங்கணும் - கண்ணகியின் கரிய கண்ணும் மாதவியின் சிவந்த
கண்ணும், உள்நிறை கரந்து அகத்து ஒளித்து நீர் உகுத்தன - உள்ளத்துள்ள பிரிவுத் துன்பத்தைக்
கற்பால் மறைத்து அகத்தே ஒளிக்கவும் நீரைச் சொரிந்தனவாய், எண்ணுமுறை இடத்தினும்
வலத்தினும் துடித்தன - முன் எண்ணிய முறையே இடப் பக்கத்தும் வலப்பக்கத்தும் துடித்தன,
விண்ணவர் கோமான் விழவு நாள் அகத்து என் - இந்திரனுடைய விழாநாளகத்து என்க.
உறைத்தல்
- துளித்தல். தேன் மல்கி நின்று அலைத்தலின் நடுங்கும் கழுநீர் போல நீர் நிறைந்து
நின்று அலைக்குங் கண் என்க. புணர்ச்சி யின்மையும் உண்மையும் உணர்த்தற்குக் கருங்கணும்
செங்கணும் என்றார். உண்ணிறை கரந்தகத் தொளித்தலைக் கண்ண கிக்கும், நீருகுத்தலை
இருவர் கண்ணுக்கும் கொள்க. ஒளித்தல் மாதவிக்கும் பொருந்துமாயின் உரைத்துக் கொள்க.
கண்கள்
அழுகையும் உவகையும் பற்றி முறையே நீருகுத்தன வென்க. மகளிர்க்குக் கண் முதலியன இடந்துடித்தல்
நன்றும் வலந்துடித்தல் தீதுமாம். பின்னர்க் கண்ணகிக்குக் கூட்டமுண்மையின் இடமும்,
மாதவிக்குப் பிரிவுண்மையின் வலமும் துடித்தன. நல்வினை நடுநாள் நீருகுத்தனவாகிய கருங்கணும்
செங்கணும் விழவு நாளகத்து இடத்தினும் வலத்தினும் துடித்தன. விழவுநா ளகத்து - விழவு
முடிந்து நீராடுதற்கு முன்னாளில் என்றபடி. என், அசை.
இருட் படாம் போக நீக்கி ஒளி கதிர் பரப்பச் சொரிந்து ஆடிப்பெயர வான்பலி யூட்ட
மண்டபமன்றியும் மன்றத்தும் பலியுறீஇ ஏற்றிச் சாற்றி எடுத்து ஈண்டிக் கொள்கென ஆட்டக்
களிசிறந்த வியலுளாங்கண் திரிதருமறுகில் உண்டுகொல் என்று ஆட்டி விலக்கி உறீஇப்
புக்க கணவர் நடுங்குநாள் உகுத்தனவாகிய கருங்கண்ணும் செங்கண்ணும் விழாநாளகத்து இடத்தினும்
வலத்தினும் துடித்தன வென வினைமுடிக்க.
இது
நிலைமண்டில ஆசிரியப்பா.
இந்திரவிழவூரெடுத்த
காதை முற்றிற்று.
|