6. கடலாடு காதை


வெள்ளி மால்வரை வியன்பெருஞ் சேடிக்
கள்ளவிழ் பூம்பொழிற் காமக் கடவுட்குக்
கருங்கயல் நெடுங்கண் காதலி தன்னொடு
விருந்தாட் டயருமோர் விஞ்சை வீரன்



1
உரை
4

       வெள்ளிமால் வரை - பெரிய வெள்ளி மலையிலே, வியன் பெருஞ் சேடி - அகன்ற பெரிய வட சேடிக் கண்ணே, கள் அவிழ் பூம் பொழில் - தேன் ஒழுக மலரும் பூக்களையுடைய தோர் சோலையிடத்தே, காமக் கடவுட்கு - காம தேவனுக்கு கருங்கயல் நெடுங்கண் காதலி தன்னொடு - கரிய கயல்போலும் நீண்ட கண்களையுடைய காதலியுடனே யிருந்து, விருந்தாட்டு அயரும் ஓர் விஞ்சை வீரன் - விழாக் கொண்டாடும் ஓர் விச்சா தர வீரன் ;

       சேடி - வித்தியாதரர் நகரம். பொழிலிலே காதலியோடு கடவுட்கு விருந்தாட்டயரும் என்க. விருந்தாட்டு - ஆண்டுதொறுஞ் செய்யும் விழா.