6. கடலாடு காதை


ஆண்மை திரிந்த பெண்மைக் கோலத்துக்
காமன் ஆடிய பேடி யாடலும்



56
உரை
57

       ஆண்மை திரிந்த பெண்மைக் கோலத்து - ஆண்மைத் தன்மையிற் றிரிந்த பெண்மைக் கோலத்தோடு, காமன் ஆடிய பேடி ஆடலும் - காமன் ஆடிய பேடென்னுங் கூத்தும் :

       ஆண்மைத் தன்மையிற் றிரிதலாவது விகாரமும் வீரியமும் நுகரும் பெற்றியும் பத்தியும் பிறவுமின்றாதல் எனவும், ஆண்மை திரிந்த வென்பதனால் தாடியும், பெண்மைக் கோலத்தென்பதனால் முலை முதலிய பெண்ணுறுப்புப் பலவும் உடைய பேடி எனவும் கொள்க. இவ்வியல்பு, 1'சுரியற்றாடி மருள்படு பூங்குழற், பவளச் செவ்வாய்த் தவள வொண்ணகை, ஒள்ளரி நெடுங்கண் வெள்ளிவெண் தோட்டுக், கருங்கொடிப் புருவத்து மருங்குவளை பிறைநுதற், காந்தளஞ் செங்கை யேந்திள வனமுலை, அகன்ற வல்கு லநநுண் மருங்குல், இகந்த வட்டுடை யெழுதுவரிக் கோலத்து, வாணன் பேரூர் மறுகிடை நடந்து, நீணில மளந்தோன் மகன்முன் னாடிய, பேடிக் கோலத்துப் பேடுகாண் குநரும்' என மணிமேகலையுள் விரித்துரைத்த வாற்றால் அறியப்படும். அடியார்க்குநல்லா ருரையில் 'இது ஆண்பேடென்று பெயர் பெறும்' எனக் காணப்படுவது ஆராய்தற்குரித்து. இது, தன் மகன் அநிருத்தனைச் சிறைமீட்டுக் காமன் சோ நகரத் தாடியது.

1. மணி; 3 : 116--25,